கொல்கத்தா
நேதாஜியின் 125 ஆவது பிறந்த நாள் விழாவில் ஜெய்ஸ்ரீராம் கோஷம் எழுப்பி தம்மை அவமானப்படுத்தியதாகக் கூறி மம்தா பானர்ஜி உரையாற்ற மறுத்துள்ளார்.
இந்தியச் சுதந்திரத்துக்காக அரும்பாடு பட்ட நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கடந்த 1987 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் தேதி பிறந்தார். அவரது 125 ஆம் பிறந்த நாள் நேற்று கொல்கத்தாவில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நேற்று மேற்கு வங்க அரசு சார்பில் பிரம்மாண்ட ஊர்வலமும் மற்றும் மத்திய அரசு சார்பில் மாபெரும் கூட்டமும் நடந்துள்ளது. நேற்று மதியம் சுமார் 12.15 மணிக்கு ஊர்வலத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொடங்கி வைத்தார்.
கொல்கத்தாவின் வடக்கு பகுதியில் உள்ள சியாம் பஜார் பகுதியில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம் சுமார் 7 கிமீ தூரம் சென்று ரெட் சாலையில் உள்ள நேதாஜி சிலையில் முடிவடைந்தது. சங்கு முழக்கத்துடன் இந்த ஊர்வலத்தை தொடங்கி வைத்த மம்தா பானர்ஜி தனது உரையில் “நாங்கள் தேர்தல் வருகிறது என்பதற்காக மட்டுமே நேதாஜியின் பிறந்த நாளைக் கொண்டாடவில்லை. மாறாக ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் அவரது பிறந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாடி வருகிறோம்.
இம்முறை நேதாஜியின் 125-வது பிறந்த நாளை இம்முறை நாங்கள் பிரம்மாண்டமாகக் கொண்டாடுகிறோம். நேதாஜியை ரவீந்திரநாத் தாகூர் ‘தேஷ்நாயக்’ என்று வர்ணித்தார். ஆகவே இந்த நாளை ‘தேஷ்நாயக் திவாஸ்’ என்ற பெயரில் அவரது பிறந்த நாளைக் கொண்டாட முடிவு செய்தோம்.
நாட்டின் மிகப் பெரிய சுதந்திர போராளிகளில் ஒருவரான நேதாஜி ஒரு சிறந்த தத்துவவாதியும் ஆவார் ஆனால் நேதாஜிக்கு உரிய மரியாதை இன்னும் வழங்கப்படவில்லை. நாடெங்கும் அவரது பிறந்த நாளை தேஷ்நாயக் திவாஸ் எனக் கொண்டாட வேண்டும். நேதாஜியின் பிறந்த நாளைத் தேசிய விடுமுறை தினமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்”.என உரையாற்றினார்.
அதன் பிறகு நடந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 125 ஆம் பிறந்த நாள் விழவில் பிரதமர் மோடி, மேற்கு வங்க முதல்வர் ,மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். அங்கு ஜெய்ஸ்ரீராம் என கோஷம் எழுப்பப்பட்டது. இதனால் மம்தா பானர்ஜி மிகவும் கோபம் அடைந்தர். அந்த விழாவில் அவர் பேச மறுத்தார்.
இது குறித்து மம்தா பானர்ஜி , “இது ஒரு மத்திய அரசு விழா ஆகும். அரசியல் நிகழ்வு இல்லை. எனவே ஒரு மரியாதை இருக்க வேண்டும். அப்படியிருக்க அழைத்து விட்டு அவமானம் செய்யக் கூடாது. நான் இந்த விழாவில் உரையாற்ற மாட்டேன். ஜெய் வங்காளம், ஜெய் ஹிந்த்” எனத் தெரிவித்துள்ளார்.
மோடி மற்றும் மம்தா இடையே ஏற்கனவே கடும் பனிப்போர் நிலவி வரும் நிலையில் இந்த நிகழ்வு இவ்வாறு முடிந்துள்ளது.