டெல்லி:
இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் துருக்கி தலையிட வேண்டாம், இந்தியா தரப்பில் பதிலடிகொடுக்கப்பட்டு உள்ளது.
காஷ்மீர் சிறப்பு பிரிவு ரத்து, சிஏஏ, என்ஆர்சி போன்ற சட்டங்களுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், துருக்கியும் பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் கருத்து தெரிவித்துவருகிறது.
சமீபத்தில், பாகிஸ்தான் சென்றிருந்த துருக்கி அதிபர் தய்யிப் எர்டோகான், காஷ்மீர் உட்பட இந்தியா – பாகிஸ்தான் இடையே இருக்கும் பிரச்னைகளை இரு நாடுகளும் அமைதியான முறையில் பேசித் தீர்வு காண வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதற்கு இந்திய வெளியுறவுத் துறை சார்பில் பதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், “ஜம்மு காஷ்மீர் தொடர்பான அனைத்து பரிந்துரைகளையும் இந்தியா நிராகரித்துவிட்டது. இது உள்நாட்டு மற்றும் உள் விவகாரம்”. “இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் நீங்கள் தலையிட வேண்டாம் என்று துருக்கி நாட்டுத் தலைவர்களை கேட்டுக் கொள்கிறோம்.
பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாதக் குழுக்களால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் துருக்கி போதிய புரிதலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.