சென்னை:
சாத்தான்குளம் வழக்கை சிபிஐ-க்கு மாற்றி, பொறுப்பை தட்டி கழிக்காதீர்கள் முதல்வரே, நிதியுதவியை விட இரண்டு உயிர்களுக்கு நீதி தேவை என மக்கள் நீதி மய்யம் தலைவரான நடிகர் கமலஹாசன் கூறியுள்ளார்.
சாத்தான்குளத்தில் ஊரடங்கை மீறி கடை திறந்து வைத்திருந்தாக தந்தை மகன் இருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, கடுமையாக தாக்கியதில் மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
இதுகுறித்து கருத்துதெரிவித்திருந்து நடிகர் கமல்ஹாசன், ‘சாத்தான்குளத்தில் நிகழ்ந்திருக்கும் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரின் மரணமும், அதனை சுற்றி நிகழ்ந்திருக்கும் மனித உரிமை மீறல்களும், சட்ட மீறல்களும் இந்நிலை நம்மில் எவருக்கு வேண்டுமானாலும் நிகழக்கூடும் என்ற அச்சத்தை நம்மிடையே விதைத்திருக்கிறது.
இரத்தம் சொட்ட சொட்ட இருவரைத் தாக்கும் மூர்க்கத்தனம் கொலைபாதகக் குற்றம். அதை செய்தவர் எவராயிருந்தாலும் அந்த தவறுக்கான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்கின்ற குரல்களுக்கு இடையில் இரண்டு காவல் உதவி ஆய்வாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட் டிருப்பதை பார்க்கும் போது, அரசு இந்த விஷயத்தில் துளி கூட உண்மைத்தன்மையை கண்டறிய முயலவில்லை என்பது தெரிகிறது.
இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவியும், நிவாரணமும் தேவை தான். ஆனால் அதை மட்டும் அவசரமாக அறிவித்து விட்டு இந்த கொலைகளை முதல்வர் கடந்து விடக் கூடாது என்றும், நிதி யுதவியை விட இரண்டு உயிர்களுக்கு நீதி தேவை. மேலும் இதில் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், சாத்தான்குளம் வழக்கை சிபிஐக்கு மாற்றுவதாக தமிழக அரசு அறிவித்திருப்பதும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.
இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன்,
சாத்தான்குளம் வழக்கை CBI-க்கு மாற்றி, பொறுப்பை தட்டி கழிக்காதீர்கள் முதல்வரே! குற்றவாளிகள் மேல் IPC 302 கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்களை புலனாய்வுத் துறையிடம் ஒப்படையுங்கள்.
CBI விசாரணைக்காக மாற்றப்பட்டு, கிடப்பில் இருக்கும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, குட்கா ஊழல் போன்ற வழக்குகளின் வரிசையில் இதையும் சேர்த்து, மக்கள் மறந்து விடுவார்கள் என காத்திராமல், நீதியைக் காத்திடுங்கள். காலம் தாழ்த்தப்பட்ட நீதி, அநீதி.
இவ்வாறு காட்டமாக தெரிவித்துள்ளார்.