நெல்லை: கேகேஎஸ்எஸ்ஆர் பெண்ணின் தலையில் அடித்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. இதுதொடர்பாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலையும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், கேகேஎஸ்எஸ்ஆர் விவகாரத்தை பெரிது படுத்த வேண்டாம் என மாநில தலைவர் அண்ணா மலைக்கு எதிராக, பாஜக சட்டமன்ற தலைவரர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இது பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு வருவாய் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ் ராமச்சந்திரன், தன்னிடம் மனு அளிக்க வந்த பெண்ணை தலையில் தட்டிய விவகாரம் சர்ச்சையானது. தன் பெற்றோருக்கு முதியோர் உதவித்தொகை கேட்டு பல நாள்களாக அலைந்தும் பலனளிக்காத காரணத்தால் அமைச்சரை நேரில் சந்திக்கையில் கடகடவெனப் பேசினார். அப்போதுதான், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் அந்தப் பெண்ணை தலையில் தட்டி அமைதிப்படுத்தியதாக கூறப்படுகிறது. pபன்னர் அந்த பெண்ணும், அமைச்சர் தனது உறவினர் என்று கூறினார். அமைச்சரும், பாலவநத்தத்தில் நடைபெற்ற வெள்ளாடுகள் வழங்கும் நிகழ்ச்சியில் என்னைச் சந்தித்த கலாவதி, எனக்கு உறவினர் பெண் என்று விளக்கம் அளித்தார். இதற்கிடையில், திமுகவினர் அந்த பெண்ணை மிரட்டி, பேச வைத்தது தொடர்பான வீடியோவும் வெளியானது.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், நெல்லை சட்டமன்ற தொகுதியில் அமைச்சராக இருந்த காலத்தில் இருந்து பல்வேறு திட்ட பணிகள் செயல்படுத்தி வருகிறேன். பாளையங்கோட்டை பகுதியில் பல்நோக்கு மருத்துவமனை இராமயம்பட்டி பகுதியில் கால்நடை கல்லூரி போன்றவை கொண்டு வரப்பட்டுள்ளது. நெல்லை சட்டமன்றத் தொகுதி மானூர் பகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தவுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதற்கான அனுமதி வழங்கி கல்லூரியும் திறக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு சுத்தமல்லி பகுதியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுகவில் இரு தரப்பினருக்கான சண்டை நடந்து வந்ததால் தான் அங்கிருந்து நான் வெளியே வந்தேன். அதிமுகவில் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே பாரதி ஜனதா கட்சியின் நிலைப்பாடு. அதிமுக கோஷ்டி பூசல் விவகாரம் பாஜகவுக்கு வருத்தம் அளிக்கிறது. அதிமுகவில் உள்ள இரு தரப்பில் யாருக்கும் பாரதிய ஜனதா கட்சி சாதகமாக செயல்படவில்லை. அதிமுக தலைமை அலுவலகம் அருகே நடந்த சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் நடக்காமல் திமுக அரசு பார்த்திருக்க வேண்டும். அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கும் அளவிற்கு திமுக அரசு சென்றிருக்கக் கூடாது. திமுகவிற்கு எதிர்க்கட்சியாகவே பாரதிய ஜனதா கட்சி உள்ளது என்றார்.
மேலும் மனு அளிக்க வந்த பெண்ணை தலையில் தட்டிய விவகாரத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரனுக்கு கெடு விதித்து பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை பேசி இருந்த நிலையில் அதுதொடர்பான கேள்விக்கு, ” வருவாய் துறை அமைச்சர் ராமச்சந்திரன் மனு அளிக்க வந்த பெண்ணை தலையில் தட்டிய விவகாரத்தை பெரிதாக்க வேண்டிய தேவை இல்லை. இயல்பாக நடந்து கொண்டதை பெரிதாக்க வேண்டிய அவசியம் இல்லை என்றே நினைக்கிறேன்” என்றார்.
மாநில பாஜக தலைவர் அண்ணாமலையின் கருத்துக்கு எதிராக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ள கருத்து கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.