சென்னை: கடற்கரை மற்றும் மக்கள் கூடும் பகுதிகள், சுற்றுலா தலங்களில் கலர் கலராக விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்களை சாப்பிடாதீர்கள் என உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு அரசு தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. புற்றுநோய் உண்டாக்கும் Rhodaminbe-B நிறமி இருப்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. உணவு பாதுகாப்பு & தரங்கள் சட்டம் – 2006ன்படி பாதுகாப்பற்ற உணவு என தெரியவந்ததால் பஞ்சு மிட்டாய்க்கு தடை விதிக்கப்படுவதாக அறிவித்து உள்ளது.
சென்னையில் விற்கப்படும் பஞ்சு மிட்டாயில் ரொடமைன் பி என்ற புற்றுநோய் ஏற்படுத்தும் கெமிக்கல் பயன்படுத்தியது ஆய்வில் உறுதியாகியுள்ளது.
கடந்த 7-ம் தேதி புதுச்சேரியில் உணவுப் பாதுகாப்புத் துறை கடற்கரை பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வந்த பஞ்சு மிட்டாய்களை எடுத்து சோதனை நடத்தினர். அதில், வண்ணத்திற்காக ‘ரோடமின்-பி’ என்ற ரசாயனம் கலப்பது உறுதி செய்யப்பட்டது. குழந்தைகளைக் குறிவைத்து விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய் காரணமாக புற்றுநோய் உருவாக வாய்ப்பு இருப்பது தெரிய வந்தது. இந்த தகவல் மக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து, புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.
மேலும், பஞ்சு மிட்டாய் வியாபாரிகள், உணவுப் பாதுகாப்பு தரச்சான்று பெற்று விற்பனை செய்ய வேண்டும். தரச்சான்று பெறாதவர்கள், உடனடியாக உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளை முறையாக அணுகி, தரச்சான்று பெற்று, பஞ்சுமிட்டாய் விற்பனையைத் தொடங்கலாம். அதுவரை பஞ்சு மிட்டாய் விற்பனை தடை செய்யப்படுகிறது. இந்த உத்தரவை மீறுவோர் மீது, விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இதுபோன்ற சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று நான் நம்புகிறேன் என ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சென்னை உள்பட தமிழ்நாட்டின் சுற்றுலா பகுதிகளிலும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனைகள் மேற்கொண்டனர். அதில், பஞ்சு மிட்டாய்களை குழந்தைகள் பார்த்து பரவசப்பட்டு ஆசைக்கொள்ளும் வகையில் கலக்கப்படும் வண்ணத்தில் புற்றுநோய் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்கள் கலக்கப்படுவதை உணவுப் பாதுகாப்புத் துறையினர் கண்டுபிடித்து உறுதி செய்தனர். சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களை பறிமுதல் செய்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் கடந்த வாரம் பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களில் ‘ரோடமைன் பி’ என்ற புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனம் கலப்படம் செய்யப்பட்டிருந்தது உறுதியாகியுள்ளது.
இதையடுத்து, பஞ்சு மிட்டாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால், சிவப்பு, ரோஸ், பச்சை, ஊதா உள்ளிட்ட பல்வேறு நிறங்களில் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்களை பொதுமக்கள் சாப்பிட கூடாது என உணவு பாதுகாப்புத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
மேலும், ரசாயனங்களை பயன்படுத்தப்படும் தயாரிப்பு நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறைக்கு உணவு பாதுகாப்புத்துறை பரிந்துரை செய்துள்ளது.
இதைத்தொடர்ந்து. பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பஞ்சு மிட்டாயில் புற்றுநோய் செல்லை உருவாக்கும் வேதிப்பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்புத்துறை பரிந்துரை அடிப்படையில் தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. தடையை மீறி பஞ்சு மிட்டாய் விற்பனை செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.