டில்லி:
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் சந்திப்பை இந்தியா வரவேற்பதாக இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இரு நாட்டு அதிபர்களும் ஒருவரை ஒருவர் தரக்குறைவான வார்த்தைகளால் வசை மாரி பொழிந்து வந்தார்கள்.
இந்நிலையில், அமெரிக்க அதிபரை சந்தித்து பேச விரும்புவதாக வடகொரிய அதிபர் கூறி யிருந்தார். இதையடுத்து வரும் மே மாதம் இரு நாட்டு தலைவர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.‘
இதுகுறித்து, அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திக்க உள்ளார் எனவும், இவர்களது சந்திப்பு வருகிற மே மாதம் நடக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
டிரம்ப் – கிம் ஜாங் உன் சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்நிலையில், வரும் மே மாதம் நடைபெற உள்ள இந்த சந்திப்புக்கு ஐநா வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், இந்தியாவும் வரவேற்பதாக இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் கூறியதாவது,
வரும் மே மாதம் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் சந்திப்பை இந்தியா வரவேற்கிறது.
இந்த சந்திப்பின் மூலம் கொரிய தீபகற்பத்தில் ஏற்பட்டுள்ள பதற்றம் தணிந்து அமைதி நிலை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு அமைதி திரும்புவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.