டெல்லி: வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை ரூ.60 உயர்ந்துள்ளது. வணிக சிலிண்டர் விலை ரூ.115 அளவுக்கு உயர்ந்துள்ளது. இது இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்கா ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் சூழலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலை அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவில் வீட்டுஉபயோக சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வு மார்ச் 7ந்தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
ஏற்கனவே மார்ச் 1ந்தேதி வணிக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும் வாய்ப்பு எழுந்துள்ளது.
அதன்படி, வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டரின் விலை 60 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், சென்னையில் இதுவரை 869 ரூபாய்க்கு விற்கப்பட்ட சிலிண்டர், இனி 929 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.
இதேபோல், வணிகப் பயன்பாட்டிற்கான 19 கிலோ எடையுள்ள சிலிண்டரின் விலை 115 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் ஒரு வணிக சிலிண்டரின் விலை 2,044 ரூபாயாகவும், டெல்லியில் 1,883 ரூபாயாகவும், மும்பையில் 1,835 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
முன்னதாக, கடந்த ஒன்றாம் தேதி 30 ரூபாய் விலை உயர்த்தப்பட்ட சூழலில், தற்போதை விலை ஏற்றத்துடன் சேர்த்து வணிக சிலிண்டரின் விலை ஒரே வாரத்தில் 145 ரூபாய் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் சூழலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலை அதிகரித்துள்ளதே இந்த திடீர் உயர்வுக்குக் காரணமாக கூறப்படுகிறது.
ஒரே நாளில் வீட்டு உபயோகம் மற்றும் வணிக சிலிண்டர்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது நடுத்தர குடும்பங்கள் மற்றும் சிறு உணவக உரிமையாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலை உயர்வு அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கும் வழிவகுக்கும் என அஞ்சப்படுகிறது.
[youtube-feed feed=1]