சென்னை
சென்னை ஐஐடியில் நாய்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி சென்னை உயர்நீதிமன்றத்துக்குப் பதில் அளித்துள்ளது.
இனப்பெருக்க தடை அறுவை சிகிச்சைக்காக ஐஐடி வளாகத்தில் உள்ள தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்கள் என சுமார் 170 நாய்களை ஐஐடி நிர்வாகம் கூண்டில் அடைத்து வைத்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டது. ஐஐடி வளாகத்தில் சுதந்திரமாகச் சுற்றி திரிய வேண்டிய நாய்களைக் கூண்டில் அடைத்து வைத்துள்ளதாக அளித்த இந்த புகாரில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனச் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் பானர்ஜி ஆகியோர் தலைமையில் விசாரணையில் உள்ளது. இந்த அமர்வு சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக அரசையும் எதிர் மனுதாரர்களாக வழக்கில் சேர்த்தது. இது குறித்துப் பதிலளிக்கச் சென்னை மாநகராட்சிக்கும் தமிழக அரசுக்கும் அமர்வு உத்தரவிட்டது.
சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக அரசு அளித்துள்ள பதிலில், “சென்னை ஐஐடி வாளகத்தில் சுமார் 150 தெரு நாய்களைப் பராமரிக்க ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நிர்வாகம் நியமித்துள்ளது. இந்த விலங்குகள் தாராளமான இடத்தில் பாதுகாப்பாக வசிக்கின்றன. அவற்றுக்கு நல்ல உணவு அளிக்கப்பட்டு ஒரு கால்நடை மருத்துவரும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.