சென்னை: ‘அப்பா’ அப்பா என குழந்தைகள் கதறுவது ஸ்டாலின் காதுகளுக்கு கேட்கலையா? என தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் மாணவிகள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை சுட்டிக்காட்டி  எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழ்நாட்டில் 2025 ஜனவரி முதல் இதுவரை 56 பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இது அப்பா என கூறி பெருமிதப்படும் முதலமைச்சர் ஸ்டாலின் காதுகளுக்கு அந்த பெண்களின் கதறல் கேட்கவில்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழகத்தில் ஜனவரி முதல் பிப்., 14ம் தேதி வரை சுமார் 107 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன; 56 பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டதாக வழக்குப் பதிவாகியுள்ளன. இதுகுறித்துகேள்வி எழுப்பி உள்ள எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி,  குழந்தைகள் அப்பா… அப்பா… என்று கதறுகிறதே; முதல்வர் ஸ்டாலினுக்கு எட்டவில்லையா என காட்டமாக விமர்சித்துள்ளார்.

வேலூரில் நடந்த அதிமுக இளைஞர்கள், இளம்பெண்கள் பாசறை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ,  “சில பேருக்கு இன்று தூக்கம் வராது. ஏனென்றால், கோட்டையில் இருப்பவர்களை வீட்டுக்கு அனுப்பும் கூட்டம் இது. வேலூர் கோட்டையில் இருந்து நம்முடைய இளைஞர் பாசறை சிப்பாய்கள் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை நோக்கி புறப்பட்டு விட்டார்கள் என்று கூறியவர்,   எடப்பாடி பழனிசாமி உடைய அறிக்கை பாஜக தலைவரின் அறிக்கையை போன்று இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார்.

ஆனால்,  அதிமுக யாரையும் நம்பி கிடையாது. மக்களை நம்பித்தான் இருக்கிறது. திமுக அதன் கூட்டணியை நம்பி இருக்கிறது. எங்களை நாடித்தான் மற்றவர்கள் வருவார்கள். மற்றவர்களை நாடிச் செல்லும் நிலை எப்போதும் கிடையாது.

இளைஞர்கள் என்னை ‘அப்பா’ என்று அழைப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். குழந்தைகள் மற்றும் பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் போது, ‘அப்பா, அப்பா’ என்று கதறும் சத்தம் முதல்வர் ஸ்டாலினுக்கு கேட்கவில்லையா? இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. ஜனவரி முதல் பிப்ரவரி 14 ஆம் தேதி வரை சுமார் 107 போக்சோ வழக்குகள் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 56 பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகியிருப்பதாக வழக்குகள் பதிவாகியுள்ளன. 

எதிர்க்கட்சியாக இருந்த போது, பிரதமர் மோடியின் வருகைக்கு கருப்பு பலூன் பறக்கவிட்டு, கோ பேக் மோடி என்று சொன்ன ஸ்டாலின், தற்போது வெல்கம் மோடி என்கிறார். ஊழல் குற்றச்சாட்டுகள் நிறைந்த காரணத்தினால் பயத்தில் வெள்ளைக்குடை பிடிக்கிறார்.  அதனால், ஸ்டாலினுக்கு வெள்ளைக்குடை வேந்தன் என்று பெயர் சூட்டினால் பொருத்தமாக இருக்கும்.

திமுக அங்கம் வகிப்பதாலேயே இந்தியா கூட்டணி சின்னாபின்னமாகி விட்டது. ஒருபக்கம் இந்தியா கூட்டணியில் இருந்து கொண்டு, மறுபக்கம் பாஜக மத்திய அமைச்சரை அழைத்து வந்து கருணாநிதிக்கான நிகழ்ச்சியில் பங்கேற்க வைக்கிறார். இரட்டை வேடம் போடும் கட்சி திமுக. அதிகாரத்திற்கு வருவதற்காக, கொள்கையை விட்டுக் கொடுக்கும் கட்சி திமுக தான்.

நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று ஸ்டாலின் கையை விரித்து விட்டார். ஊர் ஊராக சென்று, நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறி, மக்களை ஏமாற்றி, ஆட்சியை பிடித்தார்கள். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி உயர்ந்துள்ளது. திமுக ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது என விமர்சித்தவர், ழைகள் பாதிக்கப்படுவதை எண்ணிப் பார்த்து 100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்றார்.

மேலும், 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமையும். பாஜக, காங்கிரஸ் என திமுக மாறி மாறி கூட்டணி வைத்தது. நம்மை பற்றி பேச ஸ்டாலினுக்கு அருகதை இல்லை என்றும் கூறினார்.