வாஷிங்டன்:

அதிரடி நடவடிக்கை எடுப்பதில் ட்ரம்ப் கில்லாடியாக இருக்கிறார். தற்போது அவர் எடுத்திருக்கும் நடவடிக்கை ஆச்சரியத்தை தருவதாகும். அமெரிக்காவின்  வெள்ளை மாளிகை காலம்காலமாக செய்தி நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளது.

ஆனால் தற்போதைய அதிபர் ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் செய்தி சேகரிக்க தடைவிதித்திருக்கிறார். இது செய்தி நிறுவனங்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் முக்கிய செய்தி நிறுவனங்களான தி நியூயார்க் டைம்ஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ், பிபிசி, பொலிடிக்கோ மற்றும் கார்டியன் உள்ளிட்டவற்றுக்கு அதிபர் தடைவிதித்துள்ளார்.

நேற்றுமுன்தினம் அதிபர் ட்ரம்ப் தலைமையில் முக்கிய கூட்டம் ஒன்று வெள்ளை மாளிகையில் நடந்தது. அப்போது செய்தி சேகரிக்க அங்கே சென்ற தி நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட பத்திரிகைகளின் நிருபர்களை அதிகாரிகள் உள்ளே விடாமல் தடுத்தனர். இதுகுறித்து விளக்கம் கேட்டதற்கு, அதிபரின் உத்தரவு இது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து பேசிய அதிபர் ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் தினந்தோறும் நடக்கும் நிகழ்வுகளை செய்தியாக்கவேண்டிய அவசியம் இல்லை என்றும், தான் ஊடகங்களுக்கு எதிரானவன் இல்லை என்றும் கூறினார்.

“பொய்யான தகவல்களை வெறுக்கிறேன், ஆதாரமற்ற செய்திகளுக்கு எதிரானவன். செய்திகள் என்ற பெயரில் ஆதாரமற்ற பொய்யான தகவல்கள் மக்கள் மத்தியில் பரப்பப்படுகின்றன. ஆனால்  அந்த தகவல்கள் எங்கிருந்து கிடைத்தன; அதை தந்தது யார் என்ற தகவல்களை வெளியிட மறுப்பது ஏன்? “ என்று அதிபர் ட்ரம்ப் வினவியுள்ளார்.

ட்ரம்ப் அதிபர் பொறுப்புக்கு வந்ததில் இருந்து அவரது நடவடிக்கைகள் கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டு வருகின்றன. ஆனால் இந்த “ஊடக தடை”க்கு பலரும் ஆதரவளித்து வருகிறார்கள். அவர்கள், “எது செய்தி என்பதையே உணராமல் இருபத்தினான்கு மணி நேரமும் தேவையற்ற தகவல்கள் பிரேக்கிங் நியூஸ் என்ற பெயரில் தொலைக்காட்சி ஊடகங்கள் பரப்புகின்றன. ஆகவே டிரம்ப்பின் இந்தத் தடை சரியே” என தெரிவிக்கிறார்கள்.