சென்னை:

ங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு பாடம் நடத்தினால், என்ன கவுரவக் குறைச்சல் என அரசு ஆசிரியர்களுக்கு உயர்நீதி மன்ற நீதிபதி கேள்வி எழுப்பினார்.

தமிழக அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள இடைநிலை  ஆசிரியர்களை அங்கன்வாடி மையங் களில் தொடங்கப்பட்டுள்ள மழலையர் வகுப்புகளுக்கு தமிழக அரசு நியமனம் செய்தது.  இது தொடர்பாக கடந்த 2018-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி, தமிழகம் முழுவதும் அரசு நடுநிலை பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள 2,381 அங்கன் வாடி மையங்களில் பயிலும் 52,933 குழந்தைகளுக்கு மழலையர் (எல்.கே.ஜி , யு.கே.ஜி) வகுப்புகள் நடத்த ஏதுவாக அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் உபரியாக உள்ள 5,934 இடைநிலை ஆசிரியர்களையும், உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் உள்ள பள்ளிகளில் உள்ள 1979 ஆசிரியர்களையும், அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் நடத்துவதற்காக நியமித்து தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த அரசாணையை எதிர்த்து, தமிழக தொடக்க பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு பல்வேறு போராட்டங்கள் நடத்திய நிலையில், சென்னை உயர்நீதி மன்றத்திலும் வழக்கு தொடர்ந்தது. ஏற்கனவே ஆசிரியர் சங்கம் தொடர்ந்த வழக்குகளை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், அரசாணை செல்லும் என தீர்ப்பளித்தது.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம், ரிஷிவந்தியம் பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றிய தன்னை அதே பள்ளியில் அமைந்துள்ள அங்கான்வாடி மையத்தில் மழலையர் வகுப்பெடுப்பதற்காக (LKG -UKG) நியமித்த விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென கோரி ஆசிரியை சுமதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதுபோல  10க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்களும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பார்த்திபன் விசாரித்தார். அப்போது, சமீப காலமாக அரசின் முடிவுகளை எதிர்த்து ஆசிரியர்கள் வழக்குத் தொடர்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர் என்று அதிருப்தி தெரிவித்தார்.

மேலும், அங்கன்வாடி மையங்களில் பணியாற்றினால் கவுரவ் குறைச்சலா என கேள்வி எழுப்பிய நீதிபதி, மழலையர் வகுப்பு எடுக்கும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம் உள்ளிட்ட எந்த பலன்களிலும் மாற்றமில்லை என்று அரசு தெரிவித்துள்ள நிலையில், நீங்கள் பணியாற்றுவதில் என்ன பிரச்சினை என கடிந்து கொண்டார்.

அங்கன்வாடி மையங்களில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டிருக்கும் இடைநிலை ஆசிரியர்கள் அங்குதான் பணியாற்ற வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்ட நீதிபதி,  அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளைத் தொடங்கியிருக்கும் பள்ளிக்கல்வித் துறைக்கு நீதிபதி தனது பாராட்டையும் தெரிவித்தார்.