டெல்லி: பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கி வழக்குகளை சந்தித்து வரும் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா? என்பதை அறிய விரும்புவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கடந்த விசாரணையின்போது தங்களது அதிருப்தியை தெரிவித்ததாக தெரிவித்த நீதிபதிகள் தற்போது மீண்டும் அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர விரும்புகிறாரா என கேள்வி எழுப்பி உள்ளனர்.

முன்னதாக, கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி மீது அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கிக் கொடுக்காமல் ஏமாற்றியதாக 3 மோசடி வழக்குகளை சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் பதிவு செய்திருந்தனர். சுமார் ஒராண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜி மீதான  நீதிமன்ற விமர்சனங்களை தொடர்ந்து, அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து, அவருக்கு   உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா அமர்வு செப்.26 அன்று அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட்டது. அதைத்தொடர்ந்து, அவர் புழல் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்தார்.

செந்தில் பாலாஜி ஜாமினில் வெளியே வந்த 3 நாட்களில் முதலமைச்சர் ஸ்டாலின் அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தார். அவர் ஏற்கனவே வகித்த  மின்சாரத் துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறையே வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் கவுரவித்தார். இது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்,  அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி வித்யா குமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை உச்ச நீதிமன்ற  நீதிபதி அபய்.எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

ஏற்கனவே  கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ந்தேதி நடைபெற்ற விசாரணையின்போது, ஜாமீன் கிடைத்த மறுநாளே அமைச்சராக பதவியேற்றது ஏன் என அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிபதிகள்  கேள்வி எழுப்பியுள்ளதுடன்,  இதுகுறித்து  டிசம்பர் 18ந்தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தனர்.

பின்னர் இந்த வழக்கு 2024 டிசம்பர் 21ந்தேதி அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி வழக்கில் தமிழ்நாடுஅரசு பதில் அளிக்க வில்லை. இதனால், அதிருப்தி அடைந்த உச்சநீதிமன்றம்,   நீதிமன்றத்தின் உத்தரவை தமிழக அரசு மதிக்கவில்லை என தெரிவித்து, இந்த வழக்கில்,  கடந்த முறை பதில் சொல்கிறோம் என்று கூறியதால் நோட்டீஸ் அனுப்பவில்லை. தற்போது வரை தமிழக அரசிடம் இருந்து பதில் வரவில்லை. நீதிமன்றத்தின் உத்தரவை தமிழக அரசு மதிக்கவில்லை. செந்தில் பாலாஜிக்கு நிவாரணம் வழங்குவதா இல்லையா என்பது தனிப்பட்ட விஷயம். இந்த மோசடியில் எத்தனை சாட்சிகள் உள்ளனர் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பின்னர், இந்த வழக்கில், சாட்சியங்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் பட்டியலை அளிக்க தமிழக அரசுக்கு உத்தர விட்டனர். வழக்கில் உள்துறை செயலாளரை ஒரு எதிர் மனு தாரராக இணைத்து நோட்டீஸ் பிறப்பித்து, பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.

இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் ஜாமின் ரத்து கோரிய வழக்கு பிப்ரவரி 12ந்தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையைத் தொடர்ந்து  கருத்து தெரிவித்த நீதிபதிகள்,  செந்தில் பாலாஜி மீதான இந்த வழக்கின் குற்றச்சாட்டு தீவிரமாகும். அதனால்,  செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர வேண்டுமா? என்பதை கேட்டு தெரிவியுங்கள் என அரசு வழக்கறிஞரிடம் தெரிவித்தனர்.

மேலும், செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில், 212 அரசு ஊழியர்கள் சாட்சிகளாக உள்ளனர். அப்படி இருக்கும்போது அவர்கள் பயப்பட வாய்ப்பு உள்ளது. எனவே எங்களது கேள்வி,  அதனால்,  செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா? என்பதை அறிய விரும்புகிறோம். ஏனெனில் அவர் அமைச்சராக தொடர விரும்பினார் என்றால், வழக்கின் merit-ல் வழக்கை விசாரிக்கலாம்.

இந்த வழக்கு தொடர்பாக கடந்த முறையே நாங்கள் அதிருப்தியை தெரிவித்திருந்தோம். எனவே உரிய விளக்கத்தை கேட்டு தெரிவியுங்கள் என செந்தில் பாலாஜி தரப்புக்கு உத்தரவிட்டனர்.

அப்போது மனுதாரர் வழக்கு வழக்கறிஞர்,  செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்கும் முன்புவரை இந்த வழக்கு வழக்கு தொடர்பாக நேரடியாக,  வந்த தடயவியல் நிபுணர் தற்போது வர மறுக்கிறார். செந்தில் பாலாஜி அமைச்சராக உள்ளதால், அவர் பயப்படுகிறார். அதுபோல மற்ற சாட்சிகளும் பயப்படும் நிலை உருவாகி உள்ளது. அதனால்தான்  செந்தில் பாலாஜி ஜாமினை ரத்து செய்ய கோருகிறோம்என கூறினார்.

இதனைக் கேட்ட நீதிபதிகள் , “செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர வேண்டுமா ? என்பதை கேட்டு தெரிவியுங்கள் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச்.4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.