அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா விடம்- உ.பி.யின் கிழக்கு பகுதியை ஒப்படைத்துள்ளார்- ராகுல்.
அந்த பிராந்தியத்தில் உள்ள 42 மக்களவை தொகுதிகளில் காங்கிரஸை கரை சேர்க்க வேண்டிய பொறுப்பு அவரது தலையில் சுமத்தப்பட்டுள்ளது.
தங்கள் குடும்பத்து சொத்தான அமேதி ,ரேபரேலி ஆகிய தொகுதிகளுடன் பிரதமர் மோடி,முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் வென்ற தொகுதிகளும் பிரியங்கா எல்லைக்குள் வருகின்றன.
‘’உ.பி.மாநிலத்தோடு பிரியங்கா தன்னை சுருக்கி கொள்ளாமல் நாடு முழுவதும் பிரச்சாரம் செய்தால் பெரும் மாற்றம் வரும்’’ என்கிறார்கள்-அரசியல் நோக்கர்கள்.
அவர்கள் வைக்கும் வாதம் இது:
‘’கடந்த ஆண்டு நடந்த சில சட்டப்பேரவை தேர்தல்களில் –காங்கிரஸ் வாக்குகள் தான் பா.ஜ.க.வை முதல்வர் நாற்காலியில் அமர வைத்தன.உதாரணம்- திரிபுரா.
அங்கு கம்யூனிஸ்ட்கள் வீழ்த்தப்படவேண்டும் என்பதில் அதன் நிரந்தர எதிரியான காங்கிரஸ் தொண்டர்கள் தீவிரமாக இருந்தனர். கம்யூனிஸ்ட்களை எதிர் கொள்ளும் பலம் தங்களுக்கு இல்லாததால் -அவர்கள் பா.ஜ.க.வுக்கு வாக்கு அளித்தனர்.
மே.வங்காளத்திலும் இதே கதை தான்.திரினாமூல் காங்கிரசை விரட்ட- பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளித்தனர்-காங்கிரசார்.
இந்த மாநிலங்களிலும்,காங்கிரஸ் பலகீனமாக இருக்கும் மாநிலங்களிலும் பிரியங்கா முகம் காட்டினால்- காங்கிரஸ் வாக்குகள் வேறு கட்சிகளுக்கு போகாது..’’என்கிறார்கள்,அரசியல் நோக்கர்கள்.
பிரியங்கா உ.பி.யில் ஒரு ரவுண்டு வந்த நிலையிலேயே –அங்கு மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் அவர்கள் கணித்துள்ளனர்.
இந்த நிலையில் டெல்லியில் அண்மையில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசிய பிரியங்கா ஒரு விஷயத்தை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்துள்ளார்.
என்ன அது?
‘’தேர்தலில் நான் பெரிதாக அற்புதம் விளைவிப்பேன் என்று எதிர்பார்க்காதீர்கள். பூத்துகள் , மட்ட அளவில் காங்கிரசை தொண்டர்கள் வலுப்படுத்த வேண்டும். அதுவே கட்சிக்கு வெற்றியை தேடித்தரும் ‘’ என்று திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார்.
—-பாப்பாங்குளம் பாரதி