2015 – 2018-ம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல், 2015-ம் ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி நடைபெற்றது.அன்று மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.தலைவராக நாசர், பொதுச்செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி, துணைத் தலைவர்களாக கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தற்போதுள்ள நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிந்துவிட்டும் கூட நடிகர் சங்கக் கட்டிட வேலைகள் நடைபெற்று வருவதால், தேர்தலை 6 மாதங்களுக்குத் தள்ளி வைத்தனர்.தற்போது 6 மாத காலக்கெடுவும் முடிவடைந்துவிட்டதால், தேர்தல் நடத்தியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
தேர்தல் குறித்து விவாதிப்பதற்காக அவசர செயற்குழு கூட்டம், தி.நகரில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் மே 14 அன்று நடந்தது. தேர்தலை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் நியமிக்கபட்டார் .
இந்நிலையில், நேற்று காலை தேர்தல் நடத்துவது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனிடம் ஒப்படைத்தார் நாசர். அதைப் பெற்றுக் கொண்ட பத்மநாபன் விரைவில் தேர்தல் அலுவலகத்தைப் பார்வையிட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் அதிகாரி ஆவணங்களைப் பெற்றுக் கொண்டதையடுத்து, நடிகர் சங்கத் தேர்தல் விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.