டெல்லி:

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடைபெறாது, அவர்களின் பாதுகாப்புக்கு அரசு பொறுப்பு என உள்துறை  அமைச்சர் அமித்ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆகியோர் உத்தரவாதம் வழங்கியதைத் தொடர்ந்து, மருத்துவர்கள் அறிவித்திருந்த அடையாள போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவித்து உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிகையில் கடமையாற்றும் மருத்துவர்கள்,   சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் காவல்துறை ஊழியர்கள் பல இடங்களில்  கும்பல்களால் தாக்கப்பட்டு வருகின்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.  நேற்று முன்தினம் சென்னையிலும், இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறின.

இதையடுத்து, தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரியும், வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுதியும், இன்று இரவு 9 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்றப்படும் என்றும், இதில் தகுந்த நடவடிக்கையை மத்திய மாநில அரசுகள் எடுக்காவிட்டால், நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்போவதாக அகில இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவித்தது.

இந்த நிலையில், இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷா வர்தன் ஆகியோர் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரபல மருத்துவர்கள், மருத்துவ சங்க உறுப்பினர்களுடன் காணொளி காட்சி மூலம்  உரையாடினர்.

அப்போது,  காதார ஊழியர்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக மருத்துவர்கள் மேற்கொண்ட அடையாள எதிர்ப்பை வாபஸ் பெறுமாறு இந்திய மருத்துவ சங்கத்தை (ஐ.எம்.ஏ)  நிர்வாகிகளிடம் வலியுறுத்தினர். தகுந்த பாதுகாப்பு வழங்கப்படும் என்றும், வன்முறை கும்பல்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களிடம் உத்தரவாதம் அளித்தார்.

மத்திய அமைச்சர் ஹர்சவர்தனும், மருத்துவர்களின் பின்னால் அரசாங்கம் உறுதியாக நிற்கிறது என்றும் அவர்களைப் பாதுகாக்க முடிந்த அனைத்தையும் செய்யும் என்றும் உறுதி அளித்தார். எங்கள் மருத்துவர்கள் பணிபுரியும் இடத்தில் அவர்களின் பாதுகாப்பும் கண்ணியமும் பேச்சுவார்த்தைக்குட்பட்டவை அல்ல. எல்லா நேரங்களிலும் அவர்களுக்கு உகந்த சூழ்நிலையை உறுதி செய்வது எங்கள் கூட்டுப் பொறுப்பு, எனவே மருத்துவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தியதாக தெரிவித்து உள்ளார்.

நாடு மிக மோசமான பொது சுகாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நேரத்தில் அடையாள ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டாம் என்று  என்று ஐ.எம்.ஏ இன் பல முன்னாள் அலுவலர்கள் மருத்துவர்களிடம் வேண்டுகோள் விடுத்தனர். மருத்துவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தினர்.

இந்த நிலையில், மத்தியஅரசின் உத்தரவாதத்தை ஏற்று அடையாள வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக அகில இந்திய மருத்துவச் சங்கம் அறிவித்து உள்ளது.

ஏற்கனவே மருத்துவர்கள் சங்கம் அறிவித்தபடி, இன்று (ஏப்ரல் 23 ஆம் தேதி) நாடு முழுவதும் மருத்துவர்கள்  கருப்பு பேட்ஜ்களுடன் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.