சென்னை: தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி,  மருத்துவர்களின் சேவையை சிறப்பிக்கும் விதமாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், தமிழ்நாடு அரசு, மக்கள் நலனுடன் மருத்துவர் நலனையும் காக்கும் அரசாக இருக்கும் என கூறினார்.

தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு கொரோனா பெருந்தொற்று பேரிடர் காலத்தில் மகத்தான பணிபுரிந்த மருத்துவர்களின் சேவைதனை சிறப்பிக்கும் விதமாக, பாராட்டு விழா சென்னை கிண்டி கிங் இன்ஸ்டியூட்டில் இன்று காலை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்று சூழலில் சிறப்பாகப் பணிபுரிந்த மருத்துவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களை  வழங்கி கவுரவித்தார்.

மேலும், நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் மற்றும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு 100 விழுக்காடு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதற்காக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவுக்கும் முதலமைச்சர் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசு மக்கள் நல அரசு மட்டுமல்ல மருத்துவர் நலன் காக்கும் அரசாகவும் விளங்குவதாகத் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு மற்றும்  தமிழ்நாடு சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்பட ஏராளமான மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.