சென்னை:  அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து  விழுந்ததன் எதிரொலியாக  தமிழ்நாடு முழுவதும் இந்திய மருத்துவர் சங்கத்தினர் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். இதனால் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சையின்றி  நோயாளிகள் அவதிப்பட்டு வரகின்றனர்.

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் இந்திய மருத்துவர் சங்கத்தினர் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது தாய்க்கு முறையான மருத்துவம் பார்க்கவில்லை எனக்கூறி அவரது மகன்  விக்னேஷ் என்ற இளைஞர், புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.  இதையடுத்து கைது செய்யப்பட்ட விக்னேஷை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவர் குத்தப்பட்ட  சம்பவத்தை கண்டித்து மருத்துவ சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருந்தன. இதையடுத்து மருத்துவர்களுடன் பேசிய அமைச்சர், மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டதாக கூறினார்.
ஆனால், இன்று ஒருநாள் போராட்டம் நடைபெறும் என மருத்துவர்கள் சங்கம் அறிவித்தது. அதைத்தொடர்ந்து, இன்று தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் இன்று (நவம்பர் 14) ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல மருத்துவமனைகளில் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.
தற்போது மழைகாலம் என்பதால், பருவகால நோய்களான சளி, காய்ச்சல் போன்றவற்றால் பலர் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையை நாடிய நிலையில், அங்கு முறையான மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் அவதியுற்று வருகின்றனர்.
இன்றைய போராட்டம் குறித்து,   தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர்  கூறுகையில், “மருத்துவர் மீதான தாக்குதலைக் கண்டித்து, இன்று (நவ. 14) தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அவசர சிகிச்சையை தவிர்த்து அனைத்து விதமான மருத்துவ சேவைகளையும் நிறுத்தப்படும்,

இதையடுத்து புறநோயாளிகள் பிரிவு, அவசரம் இல்லாத அறுவை சிகிச்சைகள், பிற சிகிச்சைகள், மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் உள்ளிட்டவை தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தாலுகா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இயங்காது.

மருத்துவர் மீதான கடுமையான தாக்குதலை கண்டிக்கவும், குற்றவாளிகளை அரசு கடுமையாக தண்டிக்கவும், வரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் தடுக்க வலியுறுத்தவும் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுவதாக  தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் கூறினார். மேலும் இன்று மாநிலம் முழுவதும்  பகல் 12 மணிக்கு அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

மாநிலம் முழுவதும் 7900 மருத்துவமனைகள், 45,000 மருத்துவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்று உள்ளதாக இந்திய மருத்துவர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு இன்று நிறுத்தப்பட்டுள்ளது. அவசர சிகிச்சை பிரிவு மட்டும்  செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.