மும்பை

மும்பை நகரில் மருத்துவர் பரிசோதனை இல்லாமலே கொரோனா பரிசோதனை செய்யலாம் என மும்பை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு உள்ள மாநகராட்சிகளில் மும்பை முதல் இடத்தில் உள்ளது.   எனவே இங்குச் சோதனை அதிகரிக்கப்பட்டுத் தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சை நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.  ஆயினும் கொரோனா பரவுதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இதையொட்டி மும்பை மாநகராட்சி ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.

மும்பை மாநகராட்சி ஆணையர் இக்பால் சாகல், “நாளை முதல் மும்பை நகரில் கொரோனா பரிசோதனை செய்துக் கொள்ள மருத்துவர் பரிந்துரை தேவை இல்லை.   இந்தியாவில் மும்பை நகர் கொரோனா பாதிப்பில் முதல் இடத்தில் உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  இந்தியாவில் மும்பையில் முதல் முறையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து காட்கோபர் பகுதியில் உள்ள கொரோனா சிகிச்சை முகாமை நடத்தும் மருத்துவர் தீபக் பைட், “இது போலப் பல விதிகள் ஏற்கனவே அடியோடு மாற்றம் செய்யப்பட்டுள்ளன.  மும்பை மாநகராட்சி மருத்துவர்களைப் பலமுறை மிரட்டி வந்துள்ளது.   ஆன்லைன் மூலம் மருந்து சீட்டு அளிக்கும் மருத்துவர்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டு வழக்குப் பதியப்படும் என மாநகராட்சி அறிவித்தது கடும் எதிர்ப்புக்கு உள்ளானது.” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கீழே காணும் விதிகளைச் சேர்த்தால் புதிய உத்தரவு பயனுள்ளதாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

* இன்றைய நிலைப்படி நோய்வாய்ப்பட்டோருக்குப் பரிசோதனைக்கு நேரம் கிடைக்கத் தாமதம் ஆகிறது.  24 மணி நேரத்துக்குள் நேரம் கிடைக்க உறுதி செய்ய வேண்டும்.

* எங்கு பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும்,  யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்பது குறித்த எவ்வித தகவலும் இல்லை.  அவற்றை மையமாக்க வேண்டும்.

* வீட்டில் பரிசோதனை செய்துக் கொள்வது எளிதாக்கப்பட வேண்டும்.

* அதிகரிக்கும் பணிச் சுமைக்கு ஏற்ப சோதனைச்சாலைகளில் சோதனைக் கருவிகள் தேவையான அளவுக்கு இருக்க வேண்டும்.

* பரிசோதனைக்கு முன்பான ஆலோசனைகள் மூலம் மன அழுத்தம் அதிகரிப்பதைத் தவிர்க்க வேண்டும்.