தமிழ் பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார் ரைஸா.

சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர், சமீபத்தில் ஃபேசியல் செய்ய பார்லர் சென்றதாகவும் ,சில ஒப்பனை செயல்முறைகளை அழகுக்கலை மருத்துவர் செய்ததால் தனது முகத்தின் ஒரு பக்கம் வீங்கி இருப்பதாக தெரிவித்திருந்தார்.

மேலும் அந்த நபரை தொடர்பு கொள்ள முயன்றதாகவும் ஆனால் அவர் தன்னை சந்திக்கவும் பேசவும் மறுப்பதாகவும் அவரது உதவியாளர்களிடம் கேட்டபோது வெளியூர் சென்றுவிட்டதாக கூறுவதாகவும் ரைஸா குற்றம்சாட்டியிருந்தார்.

இதுகுறித்து அவருக்கு சிகிச்சையளித்த டாக்டர் பைரவி செந்தில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் : “முகத்தில் உள்ள செல்களை புத்துயிர் பெற வைக்கும் சிகிச்சை முறைதான் அவர் மேற்கொண்டார். இந்த சிகிச்சை எடுத்தால் சிறிய அளவிலான பக்கவிளைவுகள் ஏற்படும் என்று ரைஸாவிடம் எழுதி ஒப்புதல் வாங்கினோம். அது அவருக்கும் நன்றாக தெரியும். இதே சிகிச்சையை ரைஸா பலமுறை செய்திருக்கிறார். அப்போது எந்தவிதமான பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை.

கடைசியாக கடந்த 16-ம் தேதி சிகிச்சை எடுத்துக் கொண்ட போது லேசான பக்கவிளைவு ஏற்பட்டிருக்கிறது. சரியான முறையில் மருத்துவ அறிவுரைகளை பின்பற்றாததால் அவருக்கு முகம் வீங்கியிருக்கலாம்.

அவரது போட்டோவை பதிவிட்டு எங்கள் மருத்துவமனையின் பெயரைக் குறிப்பிட்டு இழிவுபடுத்தியிருக்கிறார். ரைஸாவின் குற்றச்சாட்டால் எங்கள் மருத்துவமனையின் பெயர் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே அவர் மீது வழக்கு தொடுப்போம். ரைஸா மன்னிப்பு கேட்டு இழப்புக்கு உரிய நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். எங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்புக்கு முழு பொறுப்பும் ரைஸா தான் என கூறியுள்ளார் .

அதற்கு மற்றொரு நோட்டீஸ் மூலம் பதில் அளித்திருந்த ரைஸா, தனது முகத்திற்கு பைரவியின் சிகிச்சையால் தான் இப்படி ஆனது என்றும் அதற்கு ஈடாக ஒரு கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது மருத்துவர் பைரவி செந்தில் 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தின் கதவுகளை தட்டி இருக்கிறார். தங்களுடைய மருத்துவமனையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் உள்நோக்கத்துடன் நடிகை ரைசா செயல்பட்டு இருப்பதால் நஷ்டஈடாக அவர் 5 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு கொடுத்திருக்கிறார் மருத்துவர் பைரவி செந்தில்.