ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக அறிவித்திருக்கிறது தமிழக அரசு. “வெறும் உத்தரவு மட்டும்போதாது. இதைக் கொள்கை முடிவாக அரசு அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்றத்தை நாடி மீண்டு ஸ்டெர்லைட் உற்பத்தியைத் துவங்க வாய்ப்பு உண்டு” என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

மேலும், ஏற்கெனவே மூன்று முறை இந்த ஆலை மூடப்பட்டு மூன்று முறையும் மீண்டும் செயல்பட்டது இந்த ஆலை என்றும் தெரிவிக்கிறார்கள்.

எப்போதெல்லாம் மூடப்பட்டது ஸ்டெர்லைட் ஆலை?

விரிவாகப் பார்ப்போம்…

தூத்துக்குடியில் இந்த ஆலை அமைக்கப்பட்டபோதே எதிர்ப்பு கிளம்பியது.  அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் சேர்ந்து மக்களும் போராட்டினர்.

ஆனால் சில கட்சிகள், அமைப்புகள் “சுய லாபத்துடன்” செயல்பட்டு துரோகம் செய்தன.  தவிர, அந்த காலகட்டத்தில் நிகழ்ந்த சாதிச் சண்டையாலும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு நீர்த்துப்போனது. இதற்கிடையில் தொண்டு நிறுவனங்களுக்கு நிதி அளிப்பது  மரம் நடுவது, மக்களுக்கு உதவி, வேலை வாய்ப்பு என்றெல்லாம் சொல்லி எதிர்ப்பை முடக்கியது ஸ்டெர்லைட் நிர்வாகம்.

ஆனாலும் மீண்டும் எதிர்ப்பு கிளம்பியது.

1996-ம் வருடம் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து கந்தக-டை-ஆக்சைடுடன் நச்சு வாயுக்களும் வெளியாகின. இதனால் அப்பகுதியில் வசித்த  மக்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன.

இதையடுத்து மீண்டும் மக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆலைக்கு எதிராகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடுத்தனர்.

இந்த வழக்கில் 1998ம் வருடம் அக்டோபர் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் ஓர் உத்தரவைப் பிறப்பித்தது. நாக்பூரைச் சேர்ந்த தேசியச் சுற்றுச்சூழலுக்கான பொறியியல் ஆராய்ச்சி மையம் என்ற `நீரி’ ( National Environmental Engineering Research Institute ) அமைப்பு ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பதுதான் அந்த உத்தரவு.  அந்தக் குழு ஆய்வு செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், “ஸ்டெர்லைட் ஆலை வளாகத்திலும் அதனைச் சுற்றி உள்ள இடங்களிலும் நிலத்தடி நீர் மிகவும் பாதிப்படைந்திருக்கிறது.   சுற்றுப்புறக் கிராமங்களின் நிலத்தடி நீரில் குரோமியம், தாமிரம், ஈயம், காட்மியம், குளோரைட், ஃபுளோரைட், ஆர்சனிக் தாதுப் பொருள்கள் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் மிகவும் கூடுதலாக இருக்கின்றன.  இதனால் மனிதர்களுக்கு பெரும் ஆபத்துக்கள் ஏற்படும்” என்று தெரிவித்தது. இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம் உடனடியாக ஆலையை மூட  உத்தரவிட்டது.

இதுதான் ஆலை முதன் முதலாக மூடப்பட்ட சம்பவம்.

பிறகு ஸ்டெர்லைட் நிர்வாகம், “நீரி அறிக்கையில் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த பிரச்சினைகளை சரி செய்துவிட்டோம்” என்று கூறி உயர் நீதீமன்றத்தில் மீண்டும் ஒரு மனுவைத் தாக்கல் செய்தது.

இம்மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம், ஒரு மாதம் கழித்து, “ஸ்டெர்லைட் ஆலை இரண்டு மாதங்கள் இயங்கட்டும். அதன் பின்னர் `நீரி’ அமைப்பு ஸ்டெர்லைட்டில் மீண்டும் ஆய்வு செய்து அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்” என்று  உத்தரவிட்டது.

இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டது.

நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப “நீரி” அமைப்பு மீண்டும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், முதல் அறிக்கையில் காட்டமாகப் பதிவு செய்திருந்த நீரி அமைப்பு, இரண்டாவது ஆய்வறிக்கையில் “பெரிய பாதிப்பு ஏதும் இல்லை” என்று தெரிவித்திருந்தது.

இதனால் ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்கலாம் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதற்கிடையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் 1996ம் வருடம் நவம்பர் 7-ம் தேதி முதன் முதலில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில் 2010ம் வருடம் செப்டம்பர் 28-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அதாவது சென்னை சென்னை உயர்நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்ற சென்றது ஆலை நிர்வாகம்.  வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் `உயர் நீதிமன்றத் தீர்ப்பு ஏற்கும்படியாக இல்லை. நூறுகோடி ரூபாய் நஷ்ட ஈடு அளித்துவிட்டு மீண்டும் ஆலையை இயக்கலாம்” என்று உத்தரவிட்டது.

இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் தனது  தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தார்.

இதற்கிடையில் 2013-ம் வருடம் நடந்த பெரும் விபத்து காரணமாக, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கைபடி ஸ்டெர்லைட்டை மூட உத்தரவிட்டார்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தங்களுக்குச் சாதகமாக இருந்தாலும், தமிழக அரசின் சார்பில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆலையை மூட உத்தரவிட்டதால் ஆலையைத் திறக்க முடியாத நிலை. இதையடுத்து தென்னிந்திய தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் நிறுவனம் வழக்கு தாக்கல் செய்தது. அதில் தமிழக அரசின் சார்பில் கடுமையான வாதங்கள் வைக்கப்பட்டாலும், அந்த வழக்கை டில்லி பசுமைத் தீர்ப்பாய அமர்வுக்கு மாற்றியது தென்னிந்திய தேசியப் பசுமைத் தீர்ப்பாயம்.

இதில் வழக்கம்போல, ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து நச்சு வாயு வெளியேறியதற்கான அறிவியல் ஆதாரம் இல்லாததால் அந்த ஆலையைத் திறக்க டில்லி தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்தது.

2013-ல் ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி அளித்த தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலைக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது.

இதற்கிடையே தூத்துக்குடி ஸ்டெர்லைட் சிப்காட் விரிவாக்கப் பகுதியில் தனது 2-வது ஆலையின் விரிவாக்கப் பணிகளை ஸ்டெர்லைட் மேற்கொண்டது. இதை எதிர்க்கும் வகையில் 22.05.2018-ம் தேதியன்று குமரெட்டியாபுரம் கிராம மக்கள் போராட்டத்தில் இறங்கி, ஸ்டெர்லைட்டை மூடிட வலியுறுத்தி ஆயிரக்கணக்கான பேர் தூத்துக்குடியில் 144 தடையை மீறி பேரணியாகச் சென்றனர். காவல்துறையினர் மக்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். 13 உயிர்கள் பலியாகின.

இந்நிலையில் சென்னை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் `ஸ்டெர்லைட் ஆலையின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்துக்குத் தடை’ விதித்துள்ளது.

தமிழக அரசும், ஸ்டெர்லைட் ஆலைக்கு நிரந்தர தடைவிதிப்பதாக அறிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிப்பது போல, ஆலை மூடலை கொள்கை முடிவாக தமிழக அரசு அறிவிக்க வேண்டியது அவசியம்.

செய்யுமா?