சண்டிகர்
பல வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்குத் திரும்பும் வேளையில் அரியானா மாநிலத்துக்கு மீண்டும் வர 1.09 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
ஊரடங்கு காரணமாகப் பல வெளிமாநில தொழிலாளர்கள் பணி புரியும் மாநிலங்களில் சிக்கி உள்ளனர். மத்திய அரசின் சமீபத்திய உத்தரவின்படி அனைவரும் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பி வருகின்றனர். இதையொட்டி பல மாநிலங்களில் இருந்து இந்திய ரயில்வே இடை நில்லா ரயில்களை இயக்கி வருகிறது. ஒரு சில மாநிலங்களில் பேருந்து மூலமும் சமூக இடைவெளியுடன் தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
ஆனால் இதற்கு நேர்மாறாக அரியானா மாநிலத்தில் பணி புரிந்த 1.09 லட்சம் வெளி மாநில தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு வர இணையம் மூலம் விண்ணப்பித்துள்ளனர். இவர்கள் பீகார் மற்றும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்களில் 79.29% பேர் குர்கான், ஃபரிதாபாத், பானிப்பட்டு, சோனிபட்டு, ஜஜஜர், யமுனா நகர் மற்றும் ரிவாரிக்கு வர விரும்பி உள்ளனர். இதில் 50000க்கும் மேற்பட்டோர் குர்கான் மாவட்டத்துக்கு வர விரும்பி உள்ளனர்.
இது குறித்து அரியானா மாநிலத் தலைமைச் செயலர் அனுராக் ரஸ்தோகி, “வெளி மாநில தொழிலாளர்கள் அரியானா வர விரும்பினால் நாங்கள் அவர்களை மீண்டும் அழைத்து வர ஏற்பாடுகள் செய்யத் தயாராக உள்ளோம். ஏற்கனவே மாநிலத்தில் தொழிற்சாலை இயங்க நடவடிக்கைகளை நாங்கள் தொடங்கி உள்ளோம். இவ்வாறு அதிக அளவில் தொழிலாளர்கள் திரும்பி வருவதற்கு எங்கள் மாநிலத்தில் கொரோனா தொற்று குறைவாக உள்ளதும் ஒரு காரணமாகும் என தெரிவித்துள்ளார்.
அரியானா மாநில மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், “ஏற்கனவே பலர் பீகார் மற்றும் உத்தரப்பிரதேசத்துக்குச் சென்று விட்டனர். ஊரடங்கு காரணமாக அவர்களால் மீண்டும் வர முடியவில்லை. கடந்த இரு மாதங்களாக அவர்களுக்கு அங்கு எந்த வேலை வாய்ப்பும் கிடைக்கவில்லை. ஆனால் அரியானாவில் வர்த்தக மற்றும் தொழிலக பணிகள் தொடங்கப்பட்டுள்ளதால் அவர்களை விரைவில் முதலாளிகள் அழைத்துக் கொள்வார்கள். எனவே பலரும் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர்.” எனத் தெரிவித்தார்.