டெல்லி: எல்லை தாண்டி வந்த ரோஹிங்கியாக அகதிகளுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு தர வேண்டுமா? என  காணாமல் போன்  ரோஹிங்கியா அகதிகள் தொடர்பான  வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.

டெல்லியில்  மாயமான 5 ரோஹிங்கியா அகதிகளை கண்டுபிடித்து தர வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுமீதான  விசாரணை உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபிதி,  நமது நாட்டிலும்  ஏழைகள் உள்ளனர். அவர்களுக்கான சலுகைகளை இங்குள்ள மக்கள் அனுபவிக்க உரிமை உள்ளது’ ஆனால், அவர்களுக்கு என்ன உரிமை உள்ளது என கேள்வி எழுப்பி உள்ளனர்.

முன்னதாக,  மியான்மரை  சேர்ந்த ரோஹிங்கியா எனும் இஸ்லாமிய சமுதாய மக்கள்  அங்கு அனுபவித்த துன்பத்தால் அவர்கள் அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். குறிப்பாக வங்கதேசம் மற்றும் நம் நாட்டில் அகதிகளாக உள்ளனர். நம் நாட்டுக்குள் பலரும் சட்டவிரோதமாக நுழைந்துள்ளனர்.  இப்படியான சூழலில் தான் 5 ரோஹிங்கியா அகதிகள் திடீரென்று மாயமாகி உள்ளனர். இவர்களை கண்டுபிடித்து தர வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

விசாரணையின்போது, மனுதாரர்களை தலைமை நீதிபதி சூர்யகாந்த் கடுமையாக கடிந்து கொண்டார். இதுதொடர்பாக அவர், ‛‛ரோஹிங்கியா அகதிகள் சட்டவிரோதமாக இந்தியாவுக்கு வருகின்றனர். எல்லையில் உள்ள சுரங்கம் வழியாகவும், வேலிகளை வெட்டியும் உள்ளே வருகின்றனர் என கடுமையாக சாடியதுடன்,   “ஒரு ஊடுருவல்காரர் சட்டத்தின் கீழ் பிடிபட்டால், அவர்களுக்கு நாங்கள் சிவப்பு கம்பளம் விரிக்க வேண்டுமா?” என்று கேட்டது.

சட்டவிரோதமாக,  நாட்டிற்குள் நுழைபவர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்க முடியாது என்று  கூறியதுடன்,  இப்படி நுழைவோருக்கு அனைத்து உரிமைகளும் தர வேண்டுமா? உணவு, அவர்களின் குழந்தைகளுக்கு அனைத்து உரிமைகளும் வேண்டும் என்று சொல்கிறீர்கள். இந்த நாட்டில் ஏழை மக்களும் உள்ளனர். அவர்களுக்கு அத்தகை சலுகைகளை அனுபவிக்க உரிமைகள் இல்லையா? அவர்களுக்கு பதில் மற்றவர்களுக்கு சலுகைகள் வழங்க வேண்டுமா?.

அகதிகள் என்பது சட்டப்பூர்வமாக வரையறுக்கப்பட்ட சொல். ஆனால் எந்த அடிப்படையில் ஒருவரை அதிகள் என்று மத்திய உள்துறை அமைச்சகம் சொல்கிறது?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு மனுதாரர்களின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜே ஜோ ஆண்டன் பென்னோ, ‛‛நாங்கள் அகதிகளை நாடு கடத்தும் நடவடிக்கையை ஒருபோதும் எதிர்க்கவில்லை. இங்கு பிரச்சனை என்னவென்றால் மாயமானவர்கள் காவலில் இருக்கும்போது மிஸ்ஸாகி உள்ளனர். அவர்கள் எங்கு இருந்தனர்? இப்போது எங்கு உள்ளனர் என்பது தெரியவில்லை. இங்கு பிரச்சனை என்பது அவர்களுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்பது இல்லை. அவர்களை பற்றி எந்த தகவலும் இல்லை என்பது தான் நாங்கள் கூறுகிறோம்” என்றார்.

இதையடுத்து பேசிய தலைமை நீதிபதி சூர்யகாந்த், ‛‛அந்த குறிப்பிட்ட மக்களுக்கு இங்கு சட்டப்பூர்வமான அந்தஸ்து இல்லை. வடகிழக்கு மாநிலங்கள் என்பது மிகவும் சென்டிட்டவான ஏரியா என்பது உங்களுக்கு தெரியும். இப்படி இருக்கும்போது சட்டவிரோதமாக ஒருவர் நுழைந்து, அவர் பிடிபட்டால் அவர்களுக்கு நாங்கள் சிவப்பு கம்பளம் விரிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா?” என்று மீண்டும் காட்டமாக கேள்வி எழுப்பினார்.

அதற்கு மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், ‛‛இந்த விஷயத்தில் சட்ட நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்று தான் நாங்கள் கூறுகிறோம்” என்றார்.

அதற்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த், ‛‛நீங்கள் ஆட்கொணர்வு மனு செய்துள்ளீர்கள். மீண்டும் அவர்களை கொண்டு வர வேண்டும் என்று கேட்கிறீர்கள். சட்டம் அனைவருக்கும் சமமானது. குறிப்பிட்ட நாட்டை சேர்ந்த ஒரு குழுவினருக்கு மட்டும் ஏதாவது உத்தரவு பிறப்பித்தால் அது இங்குள்ள மற்ற நாடுகளை சேர்ந்த மக்களுக்கும் பொருந்தும்” என்றார்.

சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் குடியேறுபவர்களுக்கு இடமளிக்க சட்டம் எவ்வளவு தூரம் நீட்டிக்கப்பட வேண்டும் என்று கேள்வி எழுப்பியது. இந்தியா ஒரு முக்கியமான எல்லைப் பிரச்சினைகளைக் கொண்ட நாடு என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. இந்திய குடிமக்களின் தேவைகளைப் பொருட்படுத்தாமல் புலம்பெயர்ந்தோருக்கு நாட்டின் வளங்களை அணுக அனுமதி வழங்கப்பட வேண்டுமா என்று தலைமை நீதிபதி காந்த் கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், ‛‛விசாரணைக்கு பிறகு நாடு கடத்த வேண்டும்”என்றார். ஆனால் அதனை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. மாறாக இந்த வழக்கை ஜனவரி மாதத்தில் விசாரணைக்கு வர உள்ள வழக்குடன் சேர்த்து பட்டியலிடும்படி கூறி ஒத்திவைத்தார்.