கொரோனா ஆலோசனை தர அரசியல்வாதிகள் என்ன மருத்துவர்களா? எடப்பாடி பழனிச்சாமி

Must read

சேலம்:

கொரோனா தடுத்து நடவடிக்கை மற்றும் மருத்துவத்தில் ஆலோசனை தர அரசியல்வாதிகள் என்ன மருத்துவர்களா? என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஸ்டாலின் ஆலோசனைக்கு மறைமுகமாக எதிர்ப்பு தெரிவித்தார்.

  • எந்தெந்த தொழிற்சாலைகள் இயங்கலாம் என்பது குறித்து 20ந்தேதி அறிவிக்கப்படும்
  • 98சதவிகிதம் பேருக்கு ரூ.1000 வழங்கப்பட்டு உள்ளது
  • விவசாயிகளுக்கு யாரும் எந்தத் தடையும் விதிக்கக் கூடாது
  • மத்திய அரசிடமிருந்து ரேபிட் பரிசோதனைக் கருவிகள் இன்னும் வரவில்லை
  • பருப்புகள் கையிருப்பு உள்ளன

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது சொந்த மாவட்டமான சேலம் சென்றுள்ள நிலையில்,  அங்கு  சேலம்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து  ஆலோசனை நடத்தினார்.  இந்த ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் ராமன், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் கிரிலோஸ்குமார், மஞ்சுநாதா மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

சேலத்தில் 9 இடங்கள் கொரோனா தடப்பு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறியவர், கொரோனா பரவல் தடுப்பு வளையங்களில் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 24 பேரில் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றார்.

குடும்ப அட்டைதாரர்களில் 98% பேருக்கு ரூபாய் 1000 கரோனா நிவாரணத் தொகை வழங்கப்பட்டு விட்டது.

விளைப்பொருட்களை விற்கச் செல்லும் விவசாயிகளுக்கு யாரும் எந்தத் தடையும் விதிக்கக் கூடாது.  சர்க்கரை ஆலைகளுக்கு கரும்புகளை எடுத்துச்செல்ல தடையில்லை; சர்க்கரை ஆலைகள் இயங்கவும் தடையில்லை.

தமிழக அரசு செய்த ஆர்டரின் பேரில் 24 ஆயிரம் ரேபிட் பரிசோதனைக் கருவிகள் தமிழகம் வந்துள்ளன. மத்திய அரசிடம் 50 ஆயிரம் ரேபிட் பரிசோதனைக் கருவிகள் கேட்கப்பட்டுள்ளன. மத்திய அரசிடமிருந்து ரேபிட் பரிசோதனைக் கருவிகள் இன்னும் வரவில்லை.

மருத்துவம் சார்ந்த விஷயத்தில் ஆலோசனை தர அரசியல்வாதிகள் என்ன மருத்துவர்களா?  என கேள்வி எழுப்பியவர்,  இக்கட்டான நேரத்தில் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ள எதிர்க்கட்சியினர் முனைகிறார்கள்.

குறை சொல்ல இது நேரம் இல்லை; உயிர் காக்கும் நேரம்; எதிர்க்கட்சி கூறும் குறைப்பற்றி கவலைப்படப்போவதில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர்  ஸ்டாலினை மறைமுகமாக விமர்சித்தார்.

கொரோனா பரவல் குறைந்து வருவதாக கூறியவர்,  20ந்தேதிக்கு பிறகு  எந்தெந்த தொழிற்சாலை கள் இயங்கலாம் என்பது பற்றி தமிழக அரசு நியமித்துள்ள குழு அளிக்கும் அறிக்கை அடிப்படையில் திங்கட்கிழமை அரசு அறிவிக்கும் என்றார்.

சென்னை மாநகராட்சியை பொறுத்தவரைக்கும், காய்கறி விநியோகம் செய்ய 1,100 நடமாடும் காய்கறி கடைகள் அமைக்கப்பட்டு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் 4,900 தள்ளு வண்டிகள் மூலமாக காய்கறி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

அதனால் சென்னை மாநகர மக்கள் மார்க்கெட்டிற்கு செல்லாமல் தாங்கள் இருக்கும் பகுதிக்கே இந்த நடமாடும் வாகனங்களின் மூலமாக, தள்ளுவண்டி மூலமாக வருகின்ற காய்கறிகளை வாங்கிக் கொள்ளவும். ஆகவே, பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு நல்கவேண்டும், வெளியே வராமல் தங்களுக்கு தேவைப்படும் காய்கறிகளை தங்கள் பகுதிகளிலேயே விநியோகம் செய்வதற்கு அரசு ஏற்பாடு செய்திருக்கிறது.

நகராட்சி, பேரூராட்சி, தோட்டக்கலைத் துறை மூலமாக இன்றைக்கு வாகனங்களின் வாயிலாக தமிழ்நாடு முழுவதும் 4,500 வாகனங்கள் மூலமாக தினமும் 2200 டன் காய்கறிகள் விநியோகம் செய்யப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டத்தை நாங்கள் அமல்படுத்தி இருக்கின்றோம்.

கூட்டுறவுத்துறை மூலமாக 361 வாகனங்களில் காய்கறி விநியோகம் செய்யப்படுகிறது. இதில் 42 வாகனங்கள் மூலம் மலை கிராமங்களிலும் காய்கறி கொண்டு போய் விற்பனை செய்து கொண்டு இருக்கிறோம்.

சி.எம்.டி.ஏ. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் 154 வாகனங்கள் மூலமாக சராசரியாக தினமும் 50 டன் காய்கறிகளை அந்தந்த பகுதி மக்களுக்கு அந்தந்த இடங்களிலேயே கொண்டு போய் காய்கறிகள் வழங்கப்பட்டு வருகிறது.

நாளொன்றுக்கு சராசரியாக 6,115 மோட்டார் வாகனங்கள் மற்றும் 4,900 தள்ளுவண்டிகள் மூலம் காய்கறி விநியோகம் 3,550 டன் காய்கறிகளை இன்றைக்கு பொதுமக்களுக்கு எளிதாக அவர்கள் வசிக்கும் இடங்களிலேயே அரசு விற்பனை செய்து வருகிறது.

பல்வேறு எதிர்கட்சிகள் எல்லாம் குற்றம் சாட்டுகிறார்கள். காய்கறி விலை உயர்ந்து விட்டது என்று. அது முற்றிலும் தவறு. மிக மிக குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்றைக்கு கத்திரிகாய் என்ன விலை விற்கின்றது, தக்காளி என்ன விலை விற்கின்றது என்று அன்றாடம் பத்திரிகைகளில் செய்தி கொடுத்து கொண்டு இருக்கிறீர்கள்.

சென்ற மாதம் வரை தக்காளி 20 ரூபாய்க்கு விற்றது. இப்போது 15 ரூபாய் விற்கப்படுகிறது. பெரிய வெங்காயம் 35 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இப்போது 25 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 5 மாதத்திற்கு முன்பு வெங்காயம் 80 ரூபாய்க்கு விற்றது. சென்ற மாதம் உருளை கிழங்கு 30 ரூபாய்க்கு விற்றது, இப்போது 25 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

அதேபோல கேரட் 40 ரூபாய்க்கு விற்றது 20 ரூபாய்க்கும், பீன்ஸ் 65 ரூபாய் விற்றது 45 ரூபாய்க்கும், கத்திரிக்காய் 25 ரூபாய்க்கு விற்றது 20 ரூபாய்க்கும் தற்போது விற்கப்படுகிறது. ஆக எல்லா காய்கறி விலையும் குறைக்கப்பட்டு இருக்கிறது. நியாயமான முறையில் இன்றைக்கு ஏழை எளிய மக்கள் வாங்கக்கூடிய அளவிற்கு இன்றைக்கு காய்கறி விலையை கட்டுப்பாட்டுக்குள் அரசு வைத்திருக்கிறது. தேவையான அளவிற்கு அந்தந்த பகுதிகளிலேயே காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.  மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களாக இருந்தாலும் சரி, காய்கறிகளாக இருந்தாலும் சரி, இன்றைக்கு கூட்டுறவுத் துறை மூலமாகவும், உள்ளாட்சித் துறை மூலமாகவும், வருவாய்த் துறை மூலமாகவும், வேளாண்மைத் துறை மூலமாகவும், ஆங்காங்கே நேரடியாக போய் வழங்கி கொண்டு இருக்கிறது.

தமிழக அரசு,   துவரம் பருப்பு 500 மெட்ரிக் டன், உளுத்தம் பருப்பு 500 மெட்ரிக் டன், கடலைப் பருப்பு 250 மெட்ரிக் டன், பொட்டுக் கடலை 250 மெட்ரிக் டன், மிளகு 100 மெட்ரிக் டன், சீரகம் 100 மெட்ரிக் டன், கடுகு 100 மெட்ரிக் டன், வெந்தயம் 100 மெட்ரிக் டன், பூண்டு 250 மெட்ரிக் டன், இவையெல்லாம் வெளி மாநிலத்திலிருந்து விலைக்கு வாங்கி, நம்முடைய மாநிலத்தில் விநியோகம் செய்கிறோம்.

இதனால், விலை கட்டுப்பாட்டில் இருக்கிறது. இவையெல்லாம், விலையேற்றம் இருக்கக்கூடாது என்பதற்காக அரசு எடுத்த நடவடிக்கைகள்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

More articles

Latest article