மேற்குவங்க மாநிலத்தில் நோயாளி ஒருவர் இறந்துவிட்டதையடுத்து, சம்பந்தப்பட்ட மருத்துவரின் மீது, இறந்தவரின் உறவினர்களால் கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது வெறுமேன, பொதுமக்கள் – மருத்துவர் உறவுநிலை விஷயமாக மட்டுமே கருதப்பட முடியாது. சட்டத்தின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துவதாகவே இத்தகைய சம்பவங்கள் நடக்கின்றன என்று கூறப்படுகிறது.

ஒரு ஆய்வின்படி, வெறும் 25%க்கும் குறைவான இந்தியர்களே, காவல்துறையை நம்புகிறார்கள் (ராணுவத்தை நம்புவோர் 54%) என்று தெரியவந்துள்ளது. காவல்துறை நடவடிக்கைகளில் ஏமாற்றம், பாரபட்சம், நேர விரயம் மற்றும் செலவு உள்ளிட்ட காரணிகளே, பொதுவாக காவல்துறையை நாடுவதிலிருந்து பெரும்பான்மையோரை தடுக்கின்றன. தாமதமான நீதி என்பது இந்தியாவைப் பொறுத்தவரை பெரிய சிக்கலான விஷயமாக உள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு கணக்கின்படி, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் சேர்த்து, பணியிலமர்த்த அனுமதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 2.8 மில்லியன். ஆனால், நிரப்பப்பட்ட இடங்கள் 1.9 மில்லியன் மட்டுமே. இந்தக் கணக்கீட்டின்படி 1 லட்சம் பொதுமக்களுக்கு வெறும் 144 காவலர்கள்தான் என்ற பலவீனமான நிலைமை உள்ளது. இதன்படி பார்க்கையில், பொதுமக்கள் – காவலர் விகிதாச்சாரத்தில், உலகின் பல நாடுகளைவிட இந்தியா பின்தங்கியுள்ளது தெரியவருகிறது/ இந்த எண்ணிக்கை மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகிறது.

உத்திரப்பிரதேசம், பீகார், ஆந்திரா மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களை எடுத்துக்கொண்டால், அங்கே, 1 லட்சம் பொது மக்களுக்கு வெறும் 100 காவலர்கள்தான் என்ற மோசமான விகிதாச்சாரம் உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் பஞ்சாப் ஆகியவற்றில்தான் பொதுமக்கள் – காவலர் விகிதம் சர்வதேச தரத்திற்கு ஏற்ற வகையில் உள்ளது.

மேலும், பரிந்துரைக்கப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் காவலர் நியமனம் செய்யப்பட்டாலும், அது மக்கள்தொகை பெருக்கத்திற்கு ஈடுசெய்வதாக இராது என்றே கூறப்படுகிறது. குறிப்பாக, உத்திரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் மக்கள்தொகைப் பெருக்கம் அதிகம்.

இத்தகைய பல்வேறு நடைமுறை சிக்கல்களின் காரணமாகவே, சட்டத்தின் விதிமுறைகளை மதிக்காமல் செயல்படுவது, சட்டத்தின் ஆட்சிக்கு வெளியே பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வது மற்றும் சட்டத்தை தாங்களே கையில் எடுப்பது போன்ற சம்பவங்கள் நிகழ்வதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.