சென்னை: லேசான காய்ச்சல், இருமல் உள்ளவர்கள் உடனே சிடிஸ்கேன் எடுக்க, ஸ்கேன் மையங்களை முற்றுகையிடும் நிலையில், தேவையில்லாமல் சிடி ஸ்கேன் எடுக்க வேண்டாம், அது புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என பொதுமக்களுக்கு எய்ம்ஸ் இயக்குனர் எச்சரிக்கை செய்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் எந்தவித அறிகுறியும் இல்லாமல் பரவி வரும் நிலையில், இறுதியில் சுவாசப்பிரச்சினைகளை உருவாக்கி உயிருக்கு ஆபத்தை விளைக்கிறது. இதனால் பொதுமக்கள் லேசான அறிகுறி ஏதும் தென்பட்டாலே, அது கொரோனாவாக இருக்கலாம் என கருதி, உடனே சிடி ஸ்கேன் எடுக்க சென்றுவிடுகின்றனர். ஒருமுறை சிடி ஸ்கேன் எடுப்பது 300-400 முறை மார்பக எக்ஸ்ரே எடுப்பதற்கு சமம். இது எதிர்காலத்தில் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.
இந்த நிலையில், ஸ்கேன் எடுக்க வேண்டாம் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். கொரோனா அறிகுறிகள் தென்படுவதாக சந்தேகம் ஏற்பட்டால், ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யுங்கள், அதில் குழப்பமான முடிவு ஏற்பட்டால் மட்டுமே சிடி ஸ்கேன் எடுங்கள். தேவையின்றி சிடி ஸ்கேன் எடுக்க வேண்டாம்.
ஆனால், பல தனியார் மருத்துவமனைகள், லாப நோக்கத்துடன், கொரோனா நோயாளிகைள சிடி ஸ்கேன் எடுக்க அறிவுறுத்துகின்றனர். அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டு உள்ளது.
சிடி ஸ்கேனுக்கும், லேசான அறிகுறி உள்ளவர்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. மருத்துவர் ஒருமுறை சிடி ஸ்கேன் எடுப்பது 300-400 முறை மார்பக எக்ஸ்ரே எடுப்பதற்கு சமம். இது எதிர்காலத்தில் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.
“இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகளில் 30-40 சதவிகிதம் பேருக்கு அறிகுறிகளே இல்லாமல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறி உள்ளவர்கள் நோய் தொற்றைக் கண்டறிய சிடி ஸ்கேன் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக் கொள்கின்றனர். அது தவிர்க்கப்பட வேண்டும்.
ஆரம்ப கட்டத்திலே ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக்கொள்வதால், கொரோனாவுக்கு கூடுதல் வலிமை கொடுக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், லேசான அறிகுறி உள்ள பல நோயாளிகள், பின்னர் தொற்று பாதிப்பு அதிகமாகி நிமோனியா ஏற்படுவதாக கூறுகின்றனர். தொற்று ஏற்பட்ட ஐந்து, ஆறு நாள்கள் வரை ஸ்டீராய்டு மருந்து எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் வராது.
தொற்று தீவிரமாக இருக்கும்போதுதான் ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதுவும் ஆக்சிஜன் சிகிச்சை உள்ளிட்ட பல கட்ட சிகிச்சைகளுக்கு பிறகுதான் ஸ்டீராய்டு மருந்து கொடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.