சென்னை: சளி, இருமல் இருந்தால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாதீர்கள் என பெற்றோர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழகத்தில் 19ந்தேதி முதல், 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மாணாக்கர்களுக்காக பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், சேலத்தில் அரசுப்பள்ளி மாணவி, மற்றும் ஆசிரியருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. அதனால் அந்த பள்ளி மூடப்பட்டது. அதுபோல தனியார் பள்ளிகளிலும் 2 ஆசியர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் பல இடங்களில் மாணவர்கள், ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, பெற்றோர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டு இருப்பதுடன், சக மாணவ மாணவிகளும் பயத்துடனேயே பள்ளிக்கு வருகின்றனர். மேலும் வயதான மற்றும் நோய் பாதிப்பு உள்ள ஆசிரியர்களும் அச்சத்துடனேயே காணப்படுகின்றனர். இதனால் பலர் மனஅழுத்ததுக்கு ஆளாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சளி, இருமல், தலைவலி போன்ற உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களை, பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என பெற்றோருக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் உடல் நலனில் முழு நம்பிக்கை இருந்தால் மட்டுமே பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மாணவர்களுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் மருத்துவர்களின் பரிந்துரையின்படி பள்ளிகளுக்கு வந்தால் போதுமானது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. நோய்தொற்று காலம் என்பதால் பெற்றோர் மிக கவனமுடன் செயல்பட வேண்டும்.
சேலத்தில் மாணவிக்கு எவ்வாறு கொரோனா தொற்று பரவியது என ஆய்வு மேற்கொண்டுள்ளதுடன், அவரது கிராமத்தில் சுகாதாரப் பணிகள் முடுக் கிவிடப்பட்டுள்ளன.
இனிவரும் காலங்களில் இதுபோன்று கொரோனா பரிசோதனைக்கு சென்ற மாணவ, மாணவிகள் யாரும் பள்ளிக்கு அனுமதிக்க கூடாது.
தமிழகத்தைத் தொடர்ந்து, புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் 5-ஆம் வகுப்பு மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. வளத்தாமங்கலம் அரசு தொடக்கப்பள்ளியில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அந்த பள்ளி காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.