கோவை கூட்டத்தில் ஜிஎஸ்டி குறித்த பேச்சை அரசியலாக்க வேண்டாம் என்று அன்னபூர்ணா நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
வங்கி, நிதி மற்றும் ஜிஎஸ்டி ஆகிய துறைகளில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தினர் சந்தித்து வரும் சிக்கல்கள் குறித்து விவாதிக்க கோவையில் கடந்த புதனன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார் அவருடன் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட கோவை அன்னபூர்ணா உணவக உரிமையாளர் ஜிஎஸ்டி வரிவிதிப்பை எளிமைப்படுத்த வேண்டும் என்று தனக்கே உரிய பாணியில் கேட்டதை அடுத்து இந்த விவகாரம் சமூக வலைதளத்தில் சர்ச்சையானது.
இதையடுத்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் ஆகியோரை உணவக உரிமையாளர் வியாழனன்று நேரில் சந்தித்து தன்னிலை விளக்கமளித்து மன்னிப்பு கேட்ட வீடியோவை தமிழக பாஜக-வினர் அவர்களுக்கே உரிய பாணியில் சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.
இதனால், ஜிஎஸ்டி-யை எளிமைப்படுத்த வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை பொதுவெளியில் வைத்த தமிழக தொழிலதிபரை பாஜகவினர் மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்ததாக சர்ச்சை எழுந்தது.
இதையடுத்து உணவக உரிமையாளர் தன்னையும் நிதி அமைச்சரையும் அவமானப்படுத்தி விட்டதாக வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதால் இந்த சர்ச்சை மேலும் தீவிரமானதுடன் சாமானியனின் கோரிக்கையை அதிகார திமிரில் திசை திருப்பப் பார்ப்பதாக தமிழகத்தில் உள்ள கட்சிகள் அனைத்தும் களத்தில் இறங்கின.
இந்த நிலையில், உணவக உரிமையாளர் மன்னிப்பு கேட்பதை சமூக வலைதளத்தில் வெளியிட்ட பாஜக நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்க தமிழக பாஜக தலைவர் உத்தரவிட்ட நிலையில் தமிழக பாஜக-வின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்திலும் இதற்கு மன்னிப்பு கோரப்பட்டது.
இதையடுத்து இந்த விவகாரத்தை மேலும் அரசியலாக்க வேண்டாம் என்று அன்னபூர்ணா உணவகம் சார்பில் இன்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கிரீம் பன் விளம்பரத்தால் சமூக வலைதளத்தில் மீண்டும் பேசுபொருளான ஜிஎஸ்டி விவகாரம்