கோவை: கோவை அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளரை யாரும் புண்படுத்த வேண்டாம் என வானசி சீனிவாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவை அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடம் ஜிஎஸ்டி குறித்து விவாதித்தது சர்ச்சையான வீடியோ வைரலான நிலையில், பின்னர், அதற்காக அவர் மத்திய அமைச்சரிடம் மன்னிப்பு கோரிய வீடியோவும்  வெளியாகி வைரலானது.

இந்த விவகாரத்தை, ஆளும் திமுகவினர் மற்றும் பாஜகவுக்கு எதிராக உள்ள ஊடகத்தினர் தங்களது இஸ்டம்போல திரித்து வீடியோவையும், செய்திகளையும் வெளியிட்டு வருகின்றனர். இதன்மூலம் கோவை அன்னபூர்ணா உணவகத்துக்கு  விளம்பரம்  என்றாலும் மற்றொருபுறம் உணவகத்தில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களின் விலை குறித்தும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில்,  திமுகவினர் தங்கள் இஷ்டம் போல திரித்து பொய் அவதூறுகளைப் பரப்ப முயற்சிப்பதை வன்மையாகக் கண்டிப்பதாகவும், இந்த விவகாரத்தை மேற்கொண்டு தொடராமலும், யார் மனதையும் புண்படுத்தாமலும் இருக்க பாஜக தொண்டர்களை கேட்டுக் கொள்வதாக பாஜக எம்.எல்.ஏ வானிதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக  கோவை கொடிசியா வளாகத்தில்  தொழில் அமைப்பினர் மற்றும் தொழில் வர்த்தக சபையினருடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சிக்காகவும் பொருளாதார மேம்பாட்டிற்காகவும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசி அமர்ந்த பிறகு தொழில் மற்றும் வர்த்தக அமைப்பினருக்கு பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது.

அப்போது பேசிய கோவை அன்னபூர்னா ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன், உணவகங்களில் உணவுப்பொருட்கள், இனிப்பு மற்றும் காரம் ஆகியவற்றிற்கு வெவ்வேறு மாதிரியான ஜிஎஸ்டி வரி விதிப்பை சுட்டிக்காட்டும் விதத்தில் குடும்பமாக வந்து உணவு சாப்பிடுபவர்களுக்கு பில் அடிக்கும் போது கம்ப்யூட்டரே திணறுதுங்க மேடம், இனிப்புக்கு ஒரு ஜிஎஸ்டி, காரத்துக்கு ஒரு ஜிஎஸ்டி இருக்கு, சமாளிக்க முடியல என பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாக இயக்குனரான சீனிவாசன் நேரில் சந்தித்து பேசியதாகவும், அவர் மன்னிப்பு கேட்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. இதற்கு தமிழகத்தில் இருந்தும் தேசிய அளவில் ராகுல் காந்தி உள்ளிட்டோரும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அந்த வீடியோ நீக்கப்பட்டது.

இந்த நிலையில் அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசனே தானாக முன்வந்து, பொது நிகழ்ச்சியில் அப்படி பேசி சங்கடத்தை ஏற்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டதாக வானதி சீனிவாசன் கூறியிருந்தார். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் மன்னிப்பு கேட்டார்.

தமிழ்நாட்டின் வணிக சமூகத்தின் தூணாக இருக்கும் அன்னபூர்ணா சீனிவாசன் குறித்து தமிழக பாஜக செயல்பாட்டாளர்களின் செயல்களுக்காக மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக அவர் கூறியிருந்தார். இதை தொடர்ந்து பலரும் அறிக்கைகள் பேட்டிகள் என கொடுத்து வந்த நிலையில் நிலையில், யார் மனதையும் புண்படுத்தாமலும் இருக்க பாஜக தொண்டர்களை கேட்டுக் கொள்வதாக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,” கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற தொழில் அமைப்பு நிர்வாகிகளுடனான கலந்துரையாடலில், தான் நட்புரீதியாக கூறிய கருத்துக்களை I.N.D.I கூட்டணிக் கட்சிகள் தங்கள் அரசியல் லாபத்திற்காக பொய்யாக திரித்துக் கூறி விளம்பரப்படுத்துவதை நினைத்து வருந்திய, அன்னபூர்ணா உணவகத்தின் நிறுவனர் திரு. ஸ்ரீனிவாசன் அவர்களே, தாமாக முன்வந்து தான் அப்படிப் பேசியிருக்க கூடாது என்று கூறியதை, வழக்கம்போல் திரித்துப் பேசி அரசியல் செய்ய முயற்சித்திருக்கிறார்கள்.

மேலும், நமது மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்களும், “GST பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கிறேன். ஆனால், பொது வாழ்க்கையில் உள்ள ஒரு பெண்மணியின் உணவுப் பழக்கத்தை இப்படி பொதுவெளியில் பேசு பொருளாக்கலாமா?” என்று தனது வருத்தத்தைத் தான் அவரிடம் வெளிப்படுத்தியுள்ளார். இதில் யாரும் தனது அதிகாரத்தையோ அரசியல் பொறுப்பையோ முன்னிறுத்தி எதுவும் பேசவில்லை.

ஆனால், பரம்பரை பரம்பரையாக பொய் பிரச்சாரத்தின் மூலம் வெறுப்பரசியல் செய்யும் I.N.D.I கூட்டணிக் கட்சிகள், இந்த விவகாரத்தை தங்கள் இஷ்டம் போல திரித்து பொய் அவதூறுகளைப் பரப்ப முயற்சிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த விவகாரத்தில் நம் மாநிலத் தலைவர் திரு அண்ணாமலை அவர்களும் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதனால் இந்த விவகாரத்தை மேற்கொண்டு தொடராமலும், யார் மனதையும் புண்படுத்தாமலும் இருக்க பாஜக தொண்டர்களை கேட்டுக் கொள்கிறேன்.” என கூறியுள்ளார்.