சென்னை: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூர படிப்பில் சேர வேண்டாம் என யுஜிசி எச்சரித்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைநிலை படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கப் படாததால், மாணவர்கள் சேர வேண்டாம் என பல்கலைக்கழக மானியக் குழு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து டெல்லியில் உள்ள பல்கலைக்கழக மானிய குழு (யு.ஜி.சி) செயலர் ரஜனீஷ் ஜெயின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் உள்ள சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் யு.ஜி.சி., அங்கீகாரம் பெறாமல், தொலைநிலை படிப்புகளில் மாணவர்களை சேர்த்து வருகிறது.
இது, தொலைநிலை படிப்புக்கான ஒழுங்குமுறை விதிகளை முழுமையாக மீறும் செயல். யு.ஜி.சி. அங்கீகாரம் பெறாமல், எந்த உயர் கல்வி நிறுவனமும், தொலைநிலை, திறந்த நிலை மற்றும், ‘ஆன்லைன்’ படிப்புகளை நடத்த அனுமதி கிடையாது.
அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு 2014- – 15ம் ஆண்டு வரை மட்டுமே, தொலைநிலை படிப்புகளை நடத்த அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ளது. அதன்பின், அந்த படிப்புக்கு அங்கீகாரம் பெறவில்லை. எனவே, யு.ஜி.சி., அங்கீகாரம் பெறாமல், அண்ணாமலை பல்கலைக்கழகம் நடத்தும் படிப்புகள் செல்லத்தக்கதல்ல. அந்த படிப்புகளுக்கும், அதனால், வேலைவாய்ப்பு கிடைக்காமல் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கும், அந்த பல்கலையே முழு பொறுப்பு.
எனவே, அப்பல்கலை நடத்தும் தொலைநிலை படிப்புகளில், மாணவர்கள் சேர வேண்டாம். அங்கீகாரம் பெறாத பட்டப் படிப்புகளில், மாணவர்களை சேர்த்து வருவது மிகவும் ஆபத்தானது.
இவ்வாறு கூறியுள்ளார்.