சென்னை: அங்கீகாரமற்ற செவிலியர் பயிற்சி பள்ளியில் சேர வேண்டாம் என நர்சிங் படிக்க விரும்பும் மாணவ மாணவிகளுக்கு   நர்சிங் கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் புற்றீசல்போல் அதிகரித்து வரும் அங்கீகாரம் பெறாத கல்வி நிறுவனங்களில் செவிலியர் படிப்புகளை படித்தால், வாழ்க்கையும் எதிர்காலமும் கேள்விக்குறியாகி விடும் என தமிழக நர்சிங் கவுன்சில் பதிவாளர் எஸ்.ஆனி கிரேஸ் கலைமதி எச்சரித்துள்ளார்.

இந்தியா முழுவதும் 4 ஆண்டுகள் கொண்ட பிஎஸ்சி நர்சிங், 3 ஆண்டுகள் கொண்ட டிப்ளமோ நர்சிங், 2 ஆண்டுகள் கொண்ட சான்றிதழ் உதவி செவிலியர் (ANM – Auxiliary Nurse Midwifery)படிப்புகள் உள்ளன. 12-ம் வகுப்பு தேர்ச்சி (10 2) கல்வித் தகுதியாக உள்ளது. மாணவர் சேர்க்கை தொடர்பாக அங்கீகரிக்கப்படாத செவிலியர் பள்ளிகள், கல்லூரிகளில் சேர வேண்டாம் என்று மத்திய, மாநில நர்சிங் கவுன்சில் தொடர்ந்துமாணவர்களை எச்சரித்து வருகிறது. அதுபோன்ற கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. ஆனாலும் தமிழகம் உட்பட நாடுமுழுவதும் போலி கல்வி நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் இதில் படிக்கும் மாணவர்களின் வாழ்க்கையும், எதிர்காலமும் கேள்விக்குறியாகி வருகிறது.

இதுதொடர்பாக தமிழ்நாடு செவிலியர் மற்றும் மகப்பேறு செவிலியர் கவுன்சில் பதிவாளர் எஸ்.ஆனி கிரேஸ் கலைமதி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் அரசு மற்றும் தனியாரில் பிஎஸ்சி நர்சிங், டிப்ளமோ நர்சிங், டிப்ளமோ துணை செவிலியர் படிப்புகளை பயிற்றுவிக்க அங்கீகரிக்கப்பட்ட சுமார் 800 கல்வி நிறுவனங்கள் உள்ளன. அந்த கல்வி நிறுவனங்களில் பட்டியல் https://www.tamilnadunursingcouncil.com/#/home என்ற தமிழக நர்சிங் கவுன்சில் இணையதளத்தில் உள்ளது. இதில் படித்தால் மட்டுமே கவுன்சிலில் பதிவு செய்து, உரிமம் பெற்று அங்கீகரிக்கப்பட்ட செவிலியர்களாக பணியாற்ற முடியும். தமிழக அரசும், தமிழக நர்சிங் கவுன்சிலும்தான் நர்சிங் பள்ளிகள், நர்சிங்கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குகிறது. ஆனாலும் பல்வேறு பெரிய, சிறிய மருத்துவமனைகள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள்போலியாக நர்சிங்பயிற்சிகளை நடத்தி டிப்ளமோ நர்சிங் மற்றும்சான்றிதழ்களை வழங்கி வருகின்றன.

செவிலியர் படிப்பதற்கான கல்வித்தகுதி 12-வகுப்பு தேர்ச்சி என்கிற நிலையில், அவர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்களை எல்லாம் செவிலியர் படிப்புகளுக்கு சேர்க்கின்றனர். போதிய விழிப்புணர்வு இல்லாததால் மாணவர்களும் சேர்கின்றனர். அவர்களிடம் அதிக அளவில் பணமும் வசூலிக்கின்றனர். இதனால், பணம் விரயமாவது மட்டுமின்றி, ஆண்டுகளும் வீணாகிறது. இங்கு படித்தால் கவுன்சிலில் பதிவுசெய்து உரிமம் பெற முடியாது. அரசு மருத்துவமனைகளில் பணிகளில் சேர இயலாது. இதனால், அவர்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடுகிறது. அங்கீகாரம் இல்லாத கல்வி நிறுவனத்தில் படித்தால் உரிமம் கிடைக்காது என்பதை அறிந்து கவுன்சிலுக்கு வரும் மாணவர்களும், பெற்றோரும் கண்ணீர் விடுகின்றனர்.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களின் பிஎஸ்சி நர்சிங், டிப்ளமோ நர்சிங் படிப்புகளுக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ) சேர்க்கை கலந்தாய்வு நடத்துகிறது. நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும்சான்றிதழ் உதவி செவிலியர் படிப்புக்கான இடங்களை அந்தந்த கல்வி நிறுவனங்களே நேரடியாக நிரப்புகின்றன.

எனவே, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் செவிலியர் படிப்புகளை படிக்க வேண்டும். அதேநேரம் உரிய அங்கீகாரம் பெறாமல் மாணவர்களை ஏமாற்றும்கல்வி நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.