சென்னை: சீன பட்டாசுகளை வாங்கி சிவகாசி தொழிலாளர்களை ஏமாற்றி விடாதீர்கள் என தமிழக மக்களுக்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் கூறியுள்ளார்.
காற்று மாசு என கூறி உச்சநீதிமன்றம், பட்டாசு தயாரிக்க தடை விதித்துள்ளது. அதுபோல தீபாவளி போன்ற பண்டிகையின்போது ஒருமணி நேரம் மட்டுமே வெடி வெடிக்கவும் அனுமதி வழங்கி உள்ளது. டெல்லி போன்ற மாநிலங்களில் வெடி வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், காற்று மாசு ஏற்படாதவாறு, பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்ய அறிவுறுத்தி உள்ளது.
இந்த நிலையில், சீனாவில் இருந்து தயாரிக்கப்படும் பட்டாசுகள் இந்தியாவில் ஏராளமான அளவில் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. சீன பட்டாசு இந்தியா முழுவதும் விற்பனைக்கு வந்துள்ளதால் சிவகாசி பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கலக்க மடைந்துள்ளனர். இதை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சீன பட்டாசு விலையும் குறைவு என்பதால், மக்களிடையே சீன பட்டாசுக்கு மவுசு ஏற்பட்டு வருகிறது.
இதனால், தமிழகத்தில் சிவகாசி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் கடும் இழப்பை சந்தித்து வருகின்றன. பட்டாசு தயாரிப்பில் 3 லட்சம் தொழிலாளர்கள் நேரடி வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். சிவகாசியில் பசுமை பட்டாசுகள் உள்பட அனைத்து ரக பட்டாசுகளும் தயாரிக்கப்பட்டு வருகிறது. தீபாவளியை மட்டுமே நம்பி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இந்த பட்டாசு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சீன பட்டாசுகளை வாங்கி சிவகாசி தொழிலாளர்களை ஏமாற்றி விடாதீர்கள், ஒரே நாளை நம்பி 365 நாட்களும் பணியாற்றும் சிவகாசி தொழிலாளர்களை ஏமாற்றி விடாதீர்கள். தயவு செய்து சீன பட்டாசுகளை வாங்கி விடாதீர்கள் என தமிழக மக்களுக்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.