சென்னை: ரஜினியை விமர்சிக்காதீர்கள் என்று கேட்டுக்கொண்ட அர்ஜுன மூர்த்தி பாஜகவில் சேரமாட்டேன்… ரஜினிகாந்த் உடன் இணைந்து மக்கள் சேவையில் ஈடுபட இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சி தொடங்கும் முடிவை கைவிடுவதாக ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.இது கடுமையாக விமர்சனங்களை எழுப்பி உள்ளது. பல ஆண்டுகளாக, அரசியல் யெரைச் சொல்லி, படங்களை ஓட்டிவந்தவர், திடீரென உடல்நலத்தை காட்டி அரசியல் அறிவிப்பை ரத்துசெய்து பல்டியடித்துள்ளார். இது கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட அர்ஜூன மூர்த்தி கூறியதாவது,
என்னால் மிகவும் மதிக்கப்படும் போற்றப்படுபவரும் தலைவருமானவர் ரஜினிகாந்த் மீதான அதீத நம்பிக்கை, அன்பு காரணமாக ரஜினியுடன் இணைந்து செயல்பட்டு வருகிறேன் என்றும் ரஜினி அரசியலில் இருந்து விலகும் முடிவை விமர்சனம் செய்ய வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
ரஜினி தற்போது கடுமையான மன உளைச்சலில் உள்ளார். தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென ஆர்வத்துடனும் ஆசையுடனும் இருந்தார். ஆனால், நிறைவேறாத நிலை உருவாகி உள்ளது. உடல்நலப் பாதிப்பு காரணமாக, மருத்துவர்களின் ஆலோசனைப்படியே அரசியல் கட்சியைத் தொடங்கும் முடிவை கைவிட்டு உள்ளார். நம் குடும்பத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தால் எந்த மனநிலையில் அணுகுவோம் அப்படித்தான் நாம் பார்க்க வேண்டும். அவருடைய முடிவை அவர் உடல்நலம் கருதி எடுத்த முடிவாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். எனவே ரஜினி கொஞ்ச நாள் ஓய்வு எடுப்பது நல்லது.
ரஜினி கட்சித் தொடங்கவில்லை என்றாலும், அவருடன் இணைந்து பயணிப்பேன். கட்சி தொடங்கவில்லை என்றாலும், மக்கள் சேவையில் இருப்பேன் என ரஜினி கூறியுள்ளார். எனவே எந்த சூழலிலும் அவருடன் இருப்பதே எனது விருப்பம் எனவும் அர்ஜூன மூர்த்தி தெரிவித்தார்.
என்னுடைய இரு கண்களில் ஒரு கண் மோடி, மற்றொரு கண் ரஜினிகாந்த் இவர்கள் இருவருமே இந்தியாவிற்கும், தமிழ் நாட்டிற்கும் ஏதாவது செய்யவேண்டும் என எண்ணம் கொண்டவர்கள். அந்த நம்பிக்கையின் காரணமாக தான் அவருடன் சேர்ந்து செயல்பட்டேன்.
இனியும் தொடர்ந்து ரஜினிகாந்துடனே பயணிக்க இருக்கிறேன். ரஜினி கட்சி தொடங்கவில்லை என்பதால், திரும்பவும் நான் பாஜகவுடன் செல்லப்போவதாக வரும் செய்திகள் உண்மையில்லை என்றும் கூறினார். அந்த கட்சியுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது என்பது உங்களுக்கு தெரியும். அவர் ஏற்கனவே மக்கள் சேவை செய்வேன் என தெரிவித்துள்ளார். அப்படி அவர் மக்கள் சேவை செய்யும் போது அவருடன் சேர்ந்து பணியாற்றுவது தான் சரி… அதுதான் என் ஆசை.
ரஜினிகாந்த் கடுமையான மன உளைச்சலில் இருக்கும் சூழ்நிலையில் அவரோடு தொடர்ந்து இருப்பதுதான் சரி. வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் பிஜேபிக்கு வாய்ஸ் கொடுப்பாரா? இல்லையா என்பதுதேர்தல் நேரத்தில் அவருடைய மனதில் என்ன உதிக்கிறது என்பதை வைத்து அவர் தான் முடிவு செய்வார்.
இவ்வாறு அவர் கூறினார்.