டியோரியா, உத்தரப்பிரதேசம்
இஸ்லாமிய வியாபாரிகளிடம் காய்கறிகள் வாங்க வேண்டாம் என பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் சுரேஷ் திவாரி கூறி உள்ளார்.
கொரோனா தொற்று அதிகரிக்க தப்லிகி ஜமாத் மாநாட்டில் கலந்துக் கொண்டவர்களும் அவர்களுக்கு தொடர்பானவர்களும் காரணம் என செய்தி பரவியது. அதிலிருந்து நாடெங்கும் இஸ்லாமியர் மீதான வெறுப்புக் கருத்துக்கள் அதிகரித்து வருகின்றன. அதற்கேற்றாற்போல் ஒரு சில இடங்களில் இஸ்லாமியர்கள் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்ததும் மருத்துவர்கள் மீது எச்சில் துப்பியதும் வெறுப்பை அதிகரித்தன.
பல மாநிலங்களில் பாஜகவினர் இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்து வருவது பலரது கண்டனத்துக்குள்ளாகி இருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தை பாஜக ஆட்சி செய்து வருகிறது. இங்குள்ள டியோரியா மாவட்டத்தில் அமைந்துள்ள பர்ஹாஜ் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராக பாஜகவைச் சேர்ந்த சுரேஷ் திவாரி நேற்று மக்கள் மற்றும் அரசு அதிகாரிகளைச் சந்தித்தார்.
அப்போது அவர் ”நாண் வெளிப்படையாகக் கூறுவதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். இஸ்லாமியர்களிடம் இருந்து யாரும் காய்கறிகளை வாங்க வேண்டாம்” எனக் கூறி உள்ளார். இந்த நிகழ்வு வீடியோவாக்கபட்டு வைரலானதால் மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து சுரேஷ் திவாரி பிறகு விளக்கம் அளித்தார்.
சுரேஷ் திவாரி, “அவர்கள் எச்சிலைத் துப்பி கொரோனாவை பரப்புவதாகப் புகார்கள் வருகின்றன. எனவே கொரோனா நிலை சரியாகும் வரை அவர்களிடம் இருந்து காய்கறிகள் வாங்க வேண்டும் நிலைமை சரியான பிறகு அது குறித்து முடிவு எடுக்கலாம் என்னும் பொருளில் கருத்து தெரிவித்தேன்” எனக் கூறி உள்ளார்.
இது குறித்து மாநில பாஜக செய்தி தொடர்பாளர் ராகேஷ் திரிபாதி, “பாஜக இது போலக் கருத்துக்களை என்றும் அனுமதிக்காது. சுரேஷ் திவாரி இவ்வாறு கருத்து கூறியதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கட்சி அவரை கேட்டுக் கொண்டுள்ளது. அவருடைய பதிலைப் பொறுத்து அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
[youtube https://www.youtube.com/watch?v=Z8nNUZ8AiMc]