சென்னை: தமிழக அரசாணையை எதிர்த்து திமுக முன்னாள் எம்எல்ஏ தொடர்ந்த வழக்கில், புதியதாக நேற்று பதவி ஏற்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி அரசியல் சண்டைகள் நீதிமன்றம் வருவது ஏன்? என காட்டமாக கேள்வி எழுப்பினார்.
திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழகஅரசின் அரசாணையை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக தானும், பிற திமுக நிர்வாகிகளும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநருக்கு புகார் அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிரான புகார்கள் மீது விசாரணை நடத்துவதற்கு ஒப்புதல் அளிக்க மாநில ஆளுநருக்கு அரசியல் சாசனம் அதிகாரம் வழங்கியுள்ளது. அப்படியிருக்கும்போது பொதுத்துறை செயலரின் ஒப்புதல் பெற வேண்டும் என்ற வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள சட்ட திருத்தம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனுமீதான விசாரணை நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிய பொறுப்பேற்றுக் கொண்ட தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது. அப்போது தலைமை நீதிபதி, இதுபோன்ற அரசியல் சண்டைகளை நீதி மன்றத்துக்கு கொண்டு வருவது ஏன் என்றும், அரசியல் களத்தில் சந்திக்க வேண்டியதுதானே என்று காட்டமாக கேள்வி எழுப்பினார். பின்னர், இதுதொடர்பாக தமிழக அரசு 6 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
முதல்நாளே தலைமைநீதிபதி காட்டமாக அரசியல் கட்சிகளுக்கு கேள்வி எழுப்பியது, நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.