சென்னை:
ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நாளை கோட்டை முற்றுகை போராட்டம் அறிவித்துள்ள நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டங்களில் தவிர்த்து, தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாளை போராட்டம் நடைபெறுவதை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜாக்டோ – ஜியோ நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் ஆசிரியர்கள் போராட்டங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை அமைச்சர் ஜெயக்குமார் வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு, மீன்வளம், பணியாளர், நிர்வாக சீர்த்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் வேண்டுகோள் என்ற தலைப்பில், அனைத்து நாளிதழ்களிலும் அரசின் சார்பில் விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதில், அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படும் அரசு நிர்வாகத்தை இயக்குவது, அரசு ஊழியர்கள் தான் என்பதில் எந்த ஐயமும் இல்லை. 2017-2018ஆம் நிதியாண்டில், மாநில அரசு பெற்ற மொத்த வரி வருவாய் 93 ஆயிரத்து 795 கோடி ரூபாய் என்றும், இதில், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான சம்பள செலவு மட்டும் 45 ஆயிரத்து 6 ஆயிரம் கோடி ரூபாய். இதுதவிர ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு, 20 ஆயிரத்து 397 கோடி ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது.
ஆக மொத்தம், 65 ஆயிரத்து 403 கோடி ரூபாய், நிர்வாகத்தை நடத்தும், அரசு ஊழியர்களுக்கு ஊதியமாகவும், ஓய்வூதியமாகவும் வழங்கப்படுகிறது. அதாவது, தமிழ்நாடு அரசின் மொத்த வரி வருவாயில், 70 சதவிகித தொகை, அரசு ஊழியர்களின் ஊதியம், மற்றும் ஓய்வூதியத்திற்கு வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் உட்பட மொத்தமாக உள்ள 2 கோடி குடும்பங்க ளுக்கும் சேர்த்து, மாநில அரசின் வரி வருவாயில், மக்கள் நலத்திட்டத்திற்கும், வளர்ச்சி திட்டத்திற்கும் செலவிடப்படும் தொகை 6 சதவிகிதம் மட்டுமே என்பதை அரசு ஊழியர்கள் நன்கு உணர்ந்திருப்பார்கள்.
தமிழ்நாடு அரசின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு, அடிக்கடி போராட்டத்தில் ஈடுபட்டு, நிர்வாகத்திற்கு இடையூறு ஏற்படுத்த நினைப்பர்களுடன் துணைபோகக் கூடாது என வேண்டுகோள் விடுப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
எனவே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டங்களில் ஈடுபடுவதை தவிர்த்து, தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என அன்பாக கேட்டுக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.