விழுப்புரம்: இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் விக்கிரவாண்டி தொகுதியில் 35ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று திமுக வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது. இதையடுத்து திமுக உள்பட கூட்டணி கட்சி தொண்டர்கள் வெடிவெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் தி.மு.க முன்னிலையில் உள்ள நிலையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தி.மு.கவினருக்கு இனிப்பு வழங்கினார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 9 சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்று 10 வது சுற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் சமார் 12.30 மணிளவிபல் வெளியாகி உள்ளன.
அதன்படி, திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 63,205 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரை தொடர்ந்து வரும் பாமக வேட்பாளர் 27,845 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், அவரை விட திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 35360 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை இருக்கிறார். நாதக வேட்பாளர் டாக்டர் அபிநயா வெறும் 5, 265 வாக்குகள் மட்டுமே பெற்று பெருந்தோல்வி அடைந்து வருகிறார்.
திமுக வேட்பாளரின் வெற்றி விகிதம் அதிகரித்து வருவதால், அவரது வெற்றி உறுதியாகி உள்ளது. இதையடுத்து, விக்கிரவாண்டி தொகுதி முழுவதும் திமுக தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர், பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.