வேலூர் : வேலூர் அருகே நிலம் விவகாரத்தில் திமுகவினர் கட்டப்பஞ்சாயத்து செய்து மிரட்டல் விடுத்த நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயி தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில்,   திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

வேலூர் மாவட்டம்  பொன்னை அருகே உள்ள பெரிய போடிநத்தம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி நாகேஷ் (50). இவரது நிலத்தின் அருகே கிருஷ்ணன் என்பவரது நிலம் உள்ளது. கிருஷ்ணனின் நிலத்திற்கு செல்ல பாதை விடுவது தொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்னை இருந்து வருகிறது. இந்த நிலையில், கிருஷ்ணன் தனங்ககு ஆதரவாக திமுகவைச் சேர்ந்தவர்கள் ஆதரவுடனும்,  பெருமாள் குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் கோட்டீஸ்வரன் தலைமையில், அடாவடியில் இறங்கி உள்ளனர்.  விவசாயி நாகேஷின், இடத்தில் பயிரிடப்பட்டிருந்த  வாழை மரம், பூச்செடிகள் முருங்கை மரங்கள் போன்றவற்றை பொக்லைன் எந்திரம் மூலம் அழித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நாகேஷ் கடந்த டிசம்பர் மாதம் மேல்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  ஆனால், போலீசார் புகார்மீது நடவடிக்கை எடுக்காமல், திமுகவினரிடம்  நாகேஷ் குறித்த கூறியுள்ளனர்.  இதனால் திமுக ஊராட்சி மன்ற தலைவர் கோட்டீஸ்வரன் தலைமையில் காட்பாடி திமுக ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன், பெருமாள்குப்பம் பஞ்சாயத்து தலைவர் கோட்டீஸ்வரன் உள்ளிட்டோர் நாகேஷுக்கு மிரட்டல் விடுத்ததாகவும்  வழக்கை வாபஸ் பெறும்படியும் மிரட்டியதாக கூறப்படுகிறது.

. இதனால் வேதனை அடைந்த நாகேஷ், நேற்று தனது நிலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள், நாகேஷுக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது உடலை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மேல்பாடி போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.   சுமார் ஆறு மணி நேரத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. அப்போது, இந்த விவகாரத்தில் உரிய விசாரணை மேற்காண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். அதன் பேரில், போராட்டம் கைவிடப்பட்டது. இதனை தொடர்ந்து, போலீசார் நாகேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக ஊராட்சி மன்ற தலைவர் கோடீஸ்வரன் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், வரவர திமுகவினரின் அராஜகம் அதிகரித்து வருவதாகவும், பெரிய போடிநத்தம் பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.