சென்னை:
தமிழக அரசியல் களத்திலும் கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம். ஆனால், காகிதப் பூக்கள் மணக்காதல்லவா! தி.மு.க. என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என்று திமுக தொண்டர்களுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
நடிகர்கள் கமலஹாசன், ரஜினிகாந்த் போன்றோர் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ள நிலையில், ஸ்டாலினின் காகித்தப்பூ கடிதம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:
கழக நிர்வாகத்திற்காக உள்ள 65 மாவட்டங்களில், இதுவரை 22 மாநகர் மற்றும் மாவட்டங்களைச் சார்ந்த நகர , ஒன்றிய, பகுதி, பேரூர், ஊராட்சி வட்ட கழக நிர்வாகிகளையும், கழகத்தின் துணை அமைப்பின் அமைப்பாளர், துணை அமைப்பாளர்களையும் அண்ணா அறிவாலயத்தில் சந்தித்துள்ளேன்.
சந்திப்பு என்பதை விட உணர்வுகளின் சங்கமம் என்பதே சாலப் பொருத்தமானதாகும்.
கழகத்தினரின் திருமுகங்களை மாநாடுகளில் கண்டிருக்கிறேன், பொதுக் கூட்டங்களிலும் தேர்தல் பரப்புரைகளிலும் பார்த்திருக்கிறேன். கழகத்தினர் நடத்தும் இயக்க நிகழ்வுகளிலும் இல்ல நிகழ்வுகளிலும் பலரையும் நேரடியாகச் சந்தித்துள்ளேன். ஆனாலும், கழக ஆய்வுக் கூட்டம் என்ற முறையில் ஒவ்வொரு வரிடமும் நேரில் களிப்புடன் கலந்து உரையாடும் வாய்ப்பு என்பது கழகத் தொண்டர்களுக்கு மட்டுமல்ல, செயல்தலைவர் என்ற பொறுப்பில் இருக்கின்ற தொண்டர்களுக்குத் தொண்டனான உங்களில் ஒருவனான எனக்கும் புதிய உத்வேகமூட்டும் அனுபவமாக அமைந்துள்ளது.
அரசியல் களத்தின் இயல்பான நிலையை எடுத்துச் சொன்னவர் நாமக்கல் மேற்கு மாவட்டம் திருச்செங்கோடு மகளிர் தொண்டரணித் துணை அமைப்பாளர் விசாலாட்சி. அவர் முன்னாள் கவுன்சிலர் என்பதால் கள நிலவரத்தைச் சுட்டிக்காட்டிப் பேசினார். “கோஷ்டி பிரச்சனைகளை நிறைய பார்த்துட்டோம் தளபதி. ஆனா, இப்ப நீங்க கூப்பிட்டு பேசுனது பெரிய தெம்பா இருக்கு. இனி கோஷ்டிப் பிரச்சனையெல்லாம் மறந்துட்டு கட்சி வேலை பார்ப்போம். எல்லோரும் அப்படிப் பார்க்கணும்.
சில தொகுதியில் கூட்டணிக் கட்சிக்கு சீட்டு கொடுத்திடுவாங்களோன்னு நினைக்கிறது சகஜம்தான். ஆனா, தளபதியை சந்திச்ச பிறகு தெம்பு வந்திடிச்சி. டெல்லியிலிருந்துகூட ஆளுங்க வந்து எங்க தொகுதியில நிற்கட்டும். தி.மு.க. கூட்டணின்னா ஜெயிக்க வச்சிக்காட்டுவோம்”, என்றார் உறுதியான குரலில்.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஊராட்சிச் செயலாளர் மகாலிங்கம், “நான் 28 ஆண்டுகளாக கட்சியிலே இருக்கேன். எனக்கு எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. கோஷ்டிப் பிரச்சனை இல்லாம வேலை செய்யணும். அவ்வளவுதான். எங்களுக்கு கட்சிதான் முக்கியம்”, என்று சென்னார். இப்படி எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் எத்தனையோ பேர் உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை ஒவ்வொரு நாளும் ஒலித்த குரல்களால் உணர்ந்தபோது, இயக்கத்தின் வலிமையும், வளமும் மேலும் மேலும் கூடுவதை அறிய முடிந்தது.
புதுக்கோட்டை தெற்கு மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு துணை அமைப்பாளர் நசுருதீன் குரலிலும் இது தான் ஒலித்தது. “நான் இளைஞரணி பதவிக்கான இன்டர்வியூவுக்கு அழைக்கப்பட்டேன். ஆனால் பொறுப்பு கிடைக்க வில்லை.
அதையொரு குறையாக நினைக்காமல், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கட்சி வேலையைத் தொடர்ந்து பார்த்தேன். சிறுபான்மை நலப்பிரிவில் போஸ்டிங் கிடைச்சிருக்கு. இப்பவும் முன்னே மாதிரியே கட்சி வேலையைப் பார்த்துக் கிட்டிருக்கேன். பதவியை எதிர்பார்த்து கட்சி வேலை செய்வதில்லை. கட்சி நலன் தான் முக்கியம்”, என்றார்.
கழகம் எனும் ஆலமரத்தினைத் தாங்கி நிற்கும் இத்தகைய விழுதுகளும், வேர்களும் நாளுக்கு நாள் பெருகிப் பரவிக் கொண்டே இருக்கின்றன. ஆர்வம் அதிகரித்து அறிவாலயம் வருகின்ற தொண்டர்கள் பலரும் எளிய மனிதர்களாக இருக்கிறார்கள். கிராமத்தினர் பலர் காலில் செருப்புகூட அணிவதில்லை; உடைகள் கசங்கியிருக்கின்றன.
ஆனால், கருப்பு சிவப்பு கரைவேட்டி அணிவதில் உள்ள கம்பீரத்தை வெளிப்படுத்தி, தங்கள் கொள்கை வைராக்கியத்தைக் காட்டுகிறார்கள். அறிவாலயம் என்ற பெயருக்கேற்ப அதனை அனுதினமும் தொழுதிடும் கோவிலாக நினைக்கிறார்கள். சாதி மத பேதங்களுக்கு இடமில்லாத சமத்துவக் கோவில் அது. அப்படித்தான் தலைவர் கலைஞர் அதனை உருவாக்கிக் கட்டமைத்திருக்கிறார்.
ஒவ்வொரு நாளும் மதிய உணவை ஊராட்சிச் செயலாளர்களுடன் அமர்ந்து சாப்பிடும்போது, அவர்களுக்கு ஏற்படும் பெருமையைவிட எனக்கு அதிக மனநிறைவு. கட்சி நிலவரங்களைக் கடந்து, அவர்களின் குடும்ப விவரம், தனிப்பட்ட நலன் ஆகியவை குறித்துப் பேசும்போது, அவர்கள் வெளிப்படுத்தும் அன்பு, மதிய விருந்தை விடவும் சுவையாக இருக்கிறது.
களஆய்வில் பங்கேற்கும் ஒவ்வொருவரும் என்னுடன் தனித்தனியாகப் புகைப்படம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது. அவர்களின் மன உணர்வை அறிந்து, நேரம் கூடுதலானாலும் பரவா யில்லை என ஒவ்வொருவருடனும் படம் எடுத்துக்கொள்ளும்போது, தோழமையுடன் தோளில் கைபோட்டுக் கொள்வதில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு வேறெதுவும் ஈடில்லைதான். படம் எடுக்க விரும்புகிறவர்கள் கழகத்தின் தொண்டர்கள் என்றால் நான் தொண்டர்களின் தொண்டனாக நினைத்து அவர்களின் அன்பை அப்படியே அரவணைத்து ஏற்றுக் கொள்கிறேன். தொண்டர்தம் பெருமை சொல்லவும் அரிதே அன்றோ!
கழகத்தை குடும்பக் கட்சி என்று வெளியிலிருந்து விமர்சனம் வரும்போதெல்லாம், இது குடும்பக் கட்சிதான்; பல இலட்சம் குடும்பங்கள் ஒன்றிணைந்து பாடுபடும் கட்சிதான் என்று நெஞ்சம் நிமிர்த்திட சொல்வதற்குக் காரணம், குடும்பப் பாசம் நிறைந்த கொள்கை உறவுகளாக நம் உடன்பிறப்புகள் இருப்பதால்தான். “நம் அனைவரையும் ஒரே தாய் பெற முடியாது என்பதால் தான், தனித்தனித் தாய்க்குப் பிள்ளைகளாகப் பிறந்திருக்கிறோம்”, என்று பேரறிஞர் அண்ணா சொன்னதை மறக்க முடியுமா?
பேரறிஞர் அண்ணாவும், தலைவர் கலைஞரும் வளர்த்துள்ள இந்தக் கொள்கை உணர்வுமிக்க குடும்பப் பாசம் உள்ளவரை, தி.மு.கழகம் எனும் பேரியக்கத்தை எந்த சக்தியாலும் அசைக்க முடியாது.
பருவநிலை மாறும்போது ஒரு சில பூக்கள் திடீரென மலரும், பின் உதிரும். அதுபோல தமிழக அரசியல் களத்திலும் கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம். ஆனால், காகிதப் பூக்கள் மணக்காதல்லவா! தி.மு.க. என்பது ஆயிரங்காலத்துப் பயிர். திராவிட மொழிப் பெருமைக்கும்; தமிழ் மக்களின் உரிமைக்கும் உண(ர்)வூட்டும் ஜீவாதாரப் பயிர் இது. அந்தப் பயிரைப் பாதுகாக்கும் வேலியாக உள்ள கோடித் தொண்டர்களில், முன்னிற்கும் தொண்டனாக பெரும் பொறுப்புடன் கழக ஆய்வுக் கூட்டத்தை தொடர்கிறேன்.
நேரில் பங்கேற்க இயலாத உடன்பிறப்புகளின் மனக் குரலையும் உணர்கிறேன். இயக்கம் வெற்றி நடைபோடுவதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும் என்ற உறுதியை வழங்குகிறேன்!
“விதையாகும் வேர்”, என்ற தலைப்பில் தலைவர் கலைஞர், “ஒரே மரம் தான்
அதன் தண்டு, தரையில் காலூன்றி ஆகாயம் நோக்கி மேலேறும்; வேர்களோ இறங்கும் பூமிக்குள்!
பயங்கரப் புயல்மழை ஊழியில் ஆடிடும் மரமோ படுத்துவிட்ட கிளை முறிந்து தண்டொடிந்து தரை விழும். விழாமல் இருப்பது வேர் மட்டும் தான்; எனும் தாழாத உண்மையுணர்ந்து தன்மானம் போற்றிடுவோம்! கொற்றமே தாழ்ந்து குடையைக் கவிழ்த்தாலும் கொள்கையே உயிர் என்போன், வேருக்குச் சமம்; அந்த வேர் இருந்தால் தான் அதில் தளிர் துளிர்க்கும்” என்று எழுதிய கவிதை வரிகள், கழக தோழர்க்கும் தொண்டர்க்கும் பொருத்தம் தானன்றோ!
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.