சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என அங்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் தெரிவித்து உள்ளார்.
தன்னை வேட்பாளராக அறிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் முதலில் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டது. வேட்பாளர் மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன், திருமகன் ஈவெரா போட்டியிட்டு அமோகமாக வெற்றி பெற்றார். ஆனால், அவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி 4-ம் தேதி உயிரிழந்தார். திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளதாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் மாநில தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியது. இதையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, 2023ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக மறைந்த திருமகன் ஈவேராவின் தந்தையான மூத்த காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் களமிறங்கினார். இவரும் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். இவரும் சுமார் 20 மாதங்கள் மட்டுமே பதவியில் இருந்த நிலையில், உடல்நலம் குன்றிய நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதி மீண்டும் 2வது முறையாக காலியாகி உள்ளது. அதாவது கடந்த மூன்றவரை ஆண்டுகளில் 2-வது முறையாக ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி பிப்ரவரி 5ந்தேதி வாக்குப்பதிவும், பிப்ரவரி 8ந்தேதியும் வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது. இதையடுத்து அங்கு வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி உள்ளது.
இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடாத நிலையில், திமுக தரப்பில் வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏவும், மாநிலக் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் வி.சி.சந்திரகுமார் அறிவிக்கப்பட்டு உள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சந்திரகுமார், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட வாய்ப்பு அளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் முதலில் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு செய்யப்பட்டுள்ள மக்கள் நலத்திட்டங்கள், குறிப்பாக மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம், காலை உணவு திட்டம் போன்ற பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் தான் இந்த தேர்தல் உடைய கதாநாயகனாக இருக்கப் போகிறது. அது மட்டுமல்ல இந்த இடைத்தேர்தலில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெறும்.
அதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் யூகங்களும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தேர்தல் பரப்புரையும் தான் இந்த தேர்தலில் எனக்கு மாபெரும் வெற்றிக்கு உறுதுணையாக இருக்க போகிறது என்றார்.