திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த ஒரு நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் முருகன் கலந்து கொண்டார்.

நேற்று திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு ரயில் நிலையத்தில் குருவாயூர் – சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்லும் நிகழ்வு தொடக்க விழா நடைபெற்றது.இந்த  நிகழ்ச்சிக்கு மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பி.அனந்த் தலைமை மற்றும் ப.வேலுச்சாமி எம்.பி. முன்னிலை வகித்தனர். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கொடைரோடு ரயில் நிலையத்தில் குருவாயூர் – சென்னை ரயில் நின்று செல்லும் நிகழ்வை தொடங்கி வைத்தார்.

இந்த  நிகழ்ச்சியில் மதுரை கோட்ட மேலாளர் அனந்த், ப.வேலுச்சாமி, எல்.முருகன் ஆகியோர் பேசத் தொடங்கியபோது ‘பாரத் மாதா கி ஜே’ என பாஜகவினர் கோஷமிட்டபடி இருந்தனர். நிலையத்தில் இருந்து ரயில் புறப்பட்டபோது பாஜக, திமுக தொண்டர்கள் சிலர் தங்கள் கட்சிக் கொடிகளுடன் ரயிலில் ஏறினர்.

அவர்கள் சிறிது நேரத்தில் இறங்கி விட்டனர். இந்த நிகழ்ச்சி முடிந்து அமைச்சர் எல்.முருகன் காரில் ஏற சென்றபோது ரயில் நிலையத்துக்கு வெளியே நின்று கொண்டிருந்த திமுகவினர், முதல்வர் ஸ்டாலின் வாழ்க என கோஷம் எழுப்பினர். அதற்கு பாஜகவினரும் பிரதமர் மோடி வாழ்க என்று கோஷமிட்டனர்.