சென்னை:
“கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ்மொழி கற்பிப்பதில் உள்ள தடங்கல்களை உடனே நீக்க வேண்டும்” என்று திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் திரு. டி.ஆர்.பாலு எம்பி மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
“திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மத்திய கல்வித்துறை அமைச்சரை சந்தித்து புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான கண்டனங்களை தெரிவித்தபோதிலும் அமைச்சரவையின் ஒப்புதலுடன் இந்த கல்வியாண்டிலேயே இக்கொள்கையை நிறைவேற்ற மத்திய அரசு முடிவெடுத்திருப்பது கவலையை அளிக்கிறது. மத்திய அமைச்சர் தனது ட்விட்டர் பதிவில் ஐந்தாவது வகுப்பு வரையிலும் முடிந்தால் எட்டாவது வகுப்பு வரையிலும் அதற்கு மேலும் பயிற்றுமொழி தாய்மொழியாகவோ அல்லது மாநில மொழியாகவோ அரசுப் பள்ளிகளிலும் மற்றும் தனியார் பள்ளிகளிலும் தொடர்ந்து இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் கேந்திரிய வித்யாலயா நிறுவனத்தின் திருத்தப்பட்ட கொள்கையின்படி இருபது அல்லது அதற்கு அதிகமான மாணவர்கள் விரும்பினால் மட்டுமே தாய் மொழி, தற்காலிக ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் என்று கூறப்பட்டதுடன், ஆறாம் வகுப்பிலிருந்து மட்டுமே தாய்மொழி கற்பிக்கப்படுமெனவும் வாரத்தின் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் மட்டுமே தாய் மொழி கற்பிக்கப்படுமெனவும் பல்வேறு தடைகளை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.
தாய் மொழியை கற்பதற்கு ஏற்படுத்தப்படும் தடைகள், குழந்தைகளின் கல்வி கற்கும் திறனை வெகுவாக பாதிப்பதோடு தாய்மொழியின் மதிப்பையும் முக்கியத்துவத்தையும் குறைத்துவிடும். தாய் மொழியில் கல்வி கற்கும் குழந்தைகள் சமூக பண்பாட்டுக் கூறுகளை வளர்த்துக்கொள்வதோடு மிக விரைவாகவும் தேர்ச்சி அடைகிறார்கள். குழந்தைகளும் பெற்றோர்களும் உரையாடுவதிலும் தாய்மொழி முக்கிய இடம் பெறுகிறது. எனவே இருபது அல்லது அதற்கும் மேற்பட்ட மாணவர்கள் விரும்பினால் மட்டுமே தாய்மொழி கற்பிக்கப்படும் என்பது மிகுந்த வருத்தத்துக்கு உரியதாகும்.
இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 21ஏ-ன் படி கல்வி கற்கும் உரிமை மாணவர்களின் அடிப்படை உரிமையாகும். எனவே தாய் மொழியை கற்க மத்திய அரசினால் ஏற்படுத்தப்படும் தடைகள், அரசியல் சட்டப்படி, அடிப்படை உரிமைகளுக்கு எதிரானதாகும். மத்திய அரசின் கேந்திரியா வித்யாலயா பள்ளிகளில் தாய் மொழியை கற்பதற்கு ஏற்படுத்தப்படும் தடைகள், இந்தி மொழியை திணிப்பதற்காகவும், இந்தியாவை ஒரே மொழி நாடாக மாற்றுவதற்கும் வழி வகுக்கும் என்பதால் தமிழக மக்கள் ஒருபோதும் புதிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
எனவே எங்கள் தலைவரின் அறிக்கையின்படி கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் முதல் வகுப்பிலிருந்தே தாய் மொழியை கற்பிக்க தேவையான முயற்சிகளை உடனடியாக எடுக்கவும், தடைகளை நீக்கவும், நிரந்தர ஆசிரியர்களை நியமிக்கவும், ஆவன செய்ய வேண்டும்” என மத்திய கல்வித் துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.