குடிநீர் தட்டுப்பாடு தொடர்பாக தமிழக அரசை கண்டித்து வரும் 25ம் தேதி குடிநீர் வாரிய தலைமை அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன், “வரும் 22ம் தேதி மாவட்ட அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த எங்களின் தலைமை கழகம் உத்தரவிட்டுள்ளது. ஆனாலும், இன்று முதல் 3 நாட்களுக்கு வார்டு வாரியாக நாங்கள் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி உள்ளோம். எங்கள் மாவட்டத்தில் 12 பகுதி கழகம் சார்பில் தினமும் 2 வார்டுகள் வீதம் 24 வட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

வரும் 25ம் தேதி சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள குடிநீர் வாரிய தலைமை அலுவலகம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்த இருக்கிறோம். இந்த அதிமுக அரசு குடிநீர் பிரச்சனையின் மீது போதிய அக்கறை காட்ட மறுக்கிறது. மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், இனியாவது அரசு அக்கறையுடன் குடிநீர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய முன்வரவேண்டும்” என்று தெரிவித்தார்.