டெல்லி: தலைநகர் டெல்லியில் யுஜிசி வரைவு நெறிமுறைகளை எதிர்த்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. இதில், திருச்சி சிவா, கனிமொழி எம்.பி.உ ள்பட தமிழக எம்.பி.க்கள் கலந்துகொண்டதுடன்,  எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சி தலைவரும் உ.பி. மாநில எம்.பியுமான அகிலேஷ் யாதவ் உள்பட  இண்டியா கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த  பலர் பங்கேற்றனர்.

பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ள வரைவு நெறிமுறைகளை திரும்பப்பெற வலியுறுத்தி, தி.மு.க மாணவர் அணி சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில்  இன்று  (பிப்.6) காலை 11 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தி.மு.க மாணவரணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் அறிவித்திருந்தார். அதன்படி,   இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில், எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் மற்றும் தி.மு.க உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ள.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திமுக எம்.பி. கனிமொழி, யுஜிசி விதிமுறைகள்  குறித்து, கூறுகையில், “… நேற்று, கர்நாடகாவில் அனைத்து கல்வி அமைச்சர்கள் மற்றும் உயர்கல்வி அமைச்சர்களின் கூட்டம் நடந்தது. யுஜிசி திருத்தத்தை எதிர்க்கும் ஒரு குறிப்பாணையை அவர்கள் கொண்டு வந்துள்ளனர். மத்திய அரசு மற்றும் யுஜிசி விதிமுறைகளுக்கு எதிரான திமுக மாணவர் பிரிவு போராட்டத்தில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் ஒன்று கூடியுள்ளனர்.  இது மாநில உரிமைகளை மட்டுமல்ல, மாணவர்களின் உரிமைகளையும் பறிப்பதாகும்.  மத்தியஅரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்த நாம் போராட்டம் நடத்த வேண்டும் என்றவர்,   இந்த சீர்திருத்தங்கள் மாநில சுயாட்சி மற்றும் மாணவர்களின் உரிமைகளை அச்சுறுத்துவதாக உள்ளது என்றவர், . பல்வேறு அரசியல் குழுக்களின் தலைவர்களுடன் சேர்ந்து,  தங்களது கட்சியும் இந்த திருத்தங்களுக்கு எதிராக ஒன்றுபட்டுள்ளது, இது உயர்கல்வியில் மையப்படுத்தல் குறித்த பரந்த கவலையை பிரதிபலிக்கிறது என்றார்.

மேலும்,   கர்நாடகாவில் சமீபத்தில் நடந்த கல்வி அமைச்சர்களின் கூட்டத்தில், மாற்றங்களை எதிர்க்கும் ஒரு குறிப்பாணை தயாரிக்கப்பட்டது, மாநில அரசு களின் எதிர்ப்பை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. விவாதம் தீவிரமடையும் போது, ​​மத்திய அரசு இந்த போராட்டங்களுக்கும் மறுபரிசீலனை கோரிக்கைகளுக்கும் எவ்வாறு பதிலளிக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி,  இந்திய நாட்டின் வரலாற்றை அழிப்பதே ஆர்.எஸ்.எஸ்.ன் இலக்கு  என்றவர், “இந்த நாட்டில் உள்ள மற்ற அனைத்து வரலாறுகள், அனைத்து கலாச்சாரங்கள், அனைத்து மரபுகளையும் ஒழிப்பதே RSS இன் நோக்கம் என்று நான் சிறிது காலமாக கூறி வருகிறேன். அதுதான் அவர்களின் தொடக்கப் புள்ளி, அதைத்தான் அவர்கள் அடைய விரும்புகிறார்கள். அவர்கள் ஒரு கருத்தை, அதாவது அவர்களின் யோசனை, ஒரு வரலாறு, ஒரு பாரம்பரியம் மற்றும் ஒரு மொழியை இந்த நாட்டின் மீது திணிக்க விரும்பியதால் அரசியலமைப்பைத் தாக்கினர். வெவ்வேறு மாநிலங்களின் கல்வி முறையைக் கொண்டு அவர்கள் செய்யும் இந்த முயற்சி அவர்களின் நிகழ்ச்சி நிரலைத் திணிப்பதற்கான மற்றொரு முயற்சி… இதுபோன்ற பல போராட்டங்கள் நடக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், ஏனென்றால் அவர்கள் அரசியலமைப்பைத் தாக்க முடியாது என்பதை RSS புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் நமது மாநிலங்களைத் தாக்க முடியாது. அவர்கள் நமது கலாச்சாரங்கள், நமது மரபுகள் மற்றும் நமது வரலாறுகளைத் தாக்க முடியாது.”  அனைத்து மாநிலங்களின் மொழிகளும் இணைந்துதான் இந்தியா என்ற நாடு உருவாகிறது. 3000-4000 ஆண்டு வரலாற்றை கொண்டுள்ளனர் தமிழ் மக்கள். மாநிலத்தின் மொழி, பண்பாடு, காலச்சாரம் ஆகியவற்றை அழிக்க வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ்.யின் நோக்கம் எனவும் தெரிவித்தார்.

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் எம்.பி, பேசும்போது,   ”கல்வி உரிமைக்காக, திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து போராடி வருகிறது. புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து பல போராட்டங்களை திமுக முன்னெடுத்து வருகிறது. இந்த போராட்டம் தமிழ்நாட்டில் உள்ள மாணவர்களுக்காக மட்டுமல்ல, நாட்டிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஆனது  அத்தனைப் போராட்டங்களையும் திமுகவுடன் சமாஜ்வாதி கட்சி துணை நிற்கும்” என பேசினார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ MP பேசும்போது, ”ஆளுநர் பதவி ஒழிக்கப்பட வேண்டும். அப்போதுதான் ஜனநாயகம் பாதுகாக்கப்படும். UGC-யின் வரை முறைகள் அகற்றப்பட வேண்டும். கல்வியாளர்கள் மட்டுமே குழுவில் இடம் பெற வேண்டும். அப்போதுதான் கல்வித்துறை பாதுகாக்கப்படும். திமுக மாணவர் அணி கையில் எடுத்துள்ள இந்தப் போராட்டம் வெற்றி பெறும்.” என கூறினார்.

இந்தப் போராட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். மேலும் இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்களும் பங்கேற்றனர்.

திமுக எம்.பி. திருச்சி சிவா பேசும்போது,  ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் கொண்டவர்கள் ஆளுநர்கள் ஆனதால் தான் மாநில உரிமைகள் பறிக்கப்படுகின்றன என திருச்சி சிவா எம்.பி தெரிவித்துள்ளார். யுஜிசி புதிய விதிக்கு எதிராக நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களும் வீதியில் இறங்கி போராட வேண்டும். பல்கலைக்கழகத்தை கட்டுவது, பேராசிரியர்களுக்கு ஊதியம் அளிப்பது மாநில அரசு. துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் மட்டும் ஆளுநருக்கா? என்று திருச்சி சிவா கேள்வி எழுப்பி உள்ளார்.

முன்னதாக,  மாநில அரசுகளினால் கட்டமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகிற பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை நியமிக்கும் உரிமையை ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் ஆளுநர்களுக்கு வழங்கும் வரையறைகளை உள்ளடக்கிய யுஜிசி வரைவு நெறிமுறைகள், மாநில அரசின் உரிமை பறிப்பு நடவடிக்கையாக அமைந்துள்ளது. இதனை எதிர்த்து தேசிய அளவில் கண்டனங்கள் எழுந்த நிலையில், இதற்கென தமிழ்நாடு சட்டப்பேரவையில், யுஜிசி வரைவு விதிமுறைகளை திரும்பப்பெற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிடல் மாடல் அரசு தனித் தீர்மானம் கொண்டு வந்து, நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.