விருதுநகர்:
விருதுநகர் பட்டம் புதூரில் இன்று தி.மு.க. தென் மண்டல மாநாடு நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான திமுக தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழகத்தில் தேர்தல் ஜுரம் அடிக்கத் தொடங்கி விட்டது. திமுக தலைமையிலான மெகா கூட்டணி இறுதி செய்யப்பட்டு விட்டது. அதுபோல அதிமுக கூட்டணியும் இறுதி செய்யப்பட்ட நிலையில், தேமுதிகவின் அறிவிப்புக்காக காலம் தாழ்த்தி வருகிறது.
இந்த நிலையில், இன்று நடைபெறும் திமுக தென் மண்டல மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த மாநாடில், தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியா குமரி, விருதுநகர், , மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்துக்கும் அதிகமான திமுக தொண்டர்கள், பொதுமக்கள் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த பகுதி திமுக பொறுப்பாளர்கள் செய்துள்ளனர்.
தென் மண்டல மாநாட்டுக்காக சுமார் 85 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில், 20 ஏக்கரில் பொதுக்கூட்டம், 65 ஏக்கரில் கார் பார்க்கிங் அமைக்கப்பட உள்ளது. பார்க்கிங் பகுதியில் 3 ஆயிரம் மின்விளக்குகள், நிகழ்ச்சி மைதானத்தில் 2 ஆயிரம் மின்விளக்குகள் என 5 ஆயிரம் மின்விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளது.
அதுபோல, . பொதுக்கூட்ட மேடை 60 அடி நீளம், 30 அடி அகலத்திலும், பொதுக்கூட்ட திடல் முகப்பு 500 அடி நீளத்திலும் அமைக்கப்படுகிறது. பொதுக்கூட்டம் நடக்கும் இடத்தின் இருபகுதியிலும் நான்கு வழிச்சாலையில் 20 கி.மீ தூரத்திற்கு 7 ஆயிரம் திமுக கொடிக்கம்பங்கள் நட்டப்பட்டு உள்ளன.
தென்மண்டல மாநாட்டு பொதுக்கூட்டத்தை எங்கு இருந்தும் பார்க்கும் வகையில் பிரமாண்ட மான எல்இடி திரைகள் அமைக்கப்படுகின்றன. 1.50 லட்சம் லிட்டர் குடிநீர் தொட்டியில் தண்ணீர் ஏற்றி பைப் லைன் மூலம் குடிநீர் விநியோகம், கழிப்பறை வசதிகளும் அமைக்கப்படுகின்றன. நான்குவழிச்சாலையில் பட்டம்புதூர் தொடங்கி துலுக்கப்பட்டி வரையிலான இருவழிச்சாலை பொதுக்கூட்டத்திற்கு வாகனங்கள் வந்து செல்ல ஒதுக்கப்பட உள்ளது.
இந்த பிரமாண்ட மாநாட்டில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்று கிறார். ஏற்கனவே கடந்தகடந்த 2004ம் ஆண்டு இதே விருதுநகரில்தான், திமுக தென்மண்டல மாநாடு நடத்தியது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதி களையும் அலேக்ககாக கைப்பற்றியதுபோல, இந்த மாநாடு முடிந்து நடைபெறும் பொதுக் கூட்டத்திலும் 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றும் என்று சென்டிமெண்டாக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.