சென்னை; ஆளுநரை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று திமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்து வரும் நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆலந்தூர் பாரதி, கனிமொழி எம்.பி., தயாநிதி மாறன் எம்.பி. உள்பட பலர் பங்கேற்றனர்
சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியேறிய ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலை கண்டிக்கும் வகையில், தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைமை நேற்று அறிவித்திருந்தது. அதன்படி, இன்று தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னை சைதாப்பேட்டையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் தூத்துக்குடி நாடாளு மன்ற உறுப்பினர் கனிமொழி, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆர்.எஸ்.பாரதி, “மாளிகையில் வாழ்ந்து வரும் ஆளுநருக்கு நமது போராட்டம் தெரிய வேண்டும். கடந்த சட்டமன்ற கூட்டத்தில் தேசிய கீதம் பாடப்படும் போதே வெளியேறினார். அது கிரிமினல் குற்றம். ஆளுநர் மீது வழக்கு பதிவு செய்ய முடியாது என்பதால் வாய்க்கு வந்ததெல்லாம் பேசுகிறார். தமிழ்நாடு முதலமைச்சரின் செயல்பாடுகளைப் பார்த்து வயிற்றெரிச்சலில் ஆளுநர் பேசுகிறார்.
‘சட்டமன்ற மரபுகளை அவமதித்த ஆளுநரை கண்டிக்கிறோம், தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணித்த, தமிழ்த்தாய் வாழ்த்தை அவமித்த ஆளுநரை கண்டிக்கின்றோம்” என்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் பேசுகையில், “சென்னை மாவட்டத்தின் சார்பாக அனைத்து சட்டமன்ற மாமன்ற உறுப்பினர்கள், மகளிர் அணி, இளைஞர் அணி என அனைவரும் இங்கு சிறப்பாக ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுளோம். இந்த ஆளுநர் தேவை இல்லை. மத்திய அரசின் அறிக்கையை குடியரசு தலைவர் வாசிப்பார். அவரால் ஒரு புள்ளி கூட அதில் மாற்ற முடியாது. ஆனால் ஆளுநர் அப்படி இல்லை. தமிழ்நாட்டிற்கு வந்தால் நாங்கள் சொல்வதை தான் செய்ய வேண்டும். கண்டிப்பாக தமிழ்நாட்டு மக்கள் உங்களை மன்னிக்கவே மாட்டார்கள்” என்று கூறினார்.
விழுப்புரம் நகராட்சித் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பொன். கௌதமசிகாமணி தலைமை வகித்தார். முன்னாள் எம் எல் ஏ செ.. புஷ்பராஜ், மாவட்ட திமுக அவைத் தலைவர் ம.ஜெயச்சந்திரன், பொருளாளர் . இரா. ஜனகராஜ், மாவட்டத் துணைச் செயலர்கள் தயா இளந்திரையன், கற்பகம், மாவட்ட இளைஞரணித் தலைவர் செ. மனோகரன், நகரச் செயலர் இரா. சக்கரை, பொருளாளர் இளங்கோ, நகர்மன்றத் தலைவர் இரா . தமிழ்ச்செல்வி பிரபு, நகர இளைஞரணி அமைப்பாளர் செ மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதுபோல மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் திமுக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.