சென்னை:
தமிழகத்தில் நிலவி வரும் தண்ணீர் பிரச்சினை தீர்க்க வலியுறுத்தி திமுக மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இன்று சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
அப்போது, தண்ணீர் எங்கே, தண்ணீர் எங்கே என்ற தமிழகத்தின் குரல் ஆட்சியாளர்களுக்கு கேட்காததால்தான் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெறுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை யில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நூற்றுக்கணக்கானோர் திரண்டிருந்த நிலையில், அவர்களுடன் சேர்ந்து ஸ்டாலின் ஆர்ப்பாட்டம் நடத்தினார். அப்போது, காலிக் குடங்களுடன் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய மு.க.ஸ்டாலின், தண்ணீர் பஞ்சத்தை பற்றி ஆட்சியாளர்கள் கவலைப்படாததால் மக்கள் காலிக்குடங்களுடன் போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது .
சென்னைக்கு நீராதாரமாக உள்ள ஏரிகள் வற்றத் தொடங்கியபோதே, ஓராண்டாக எச்சரித்தும் ஆட்சியாளர்கள் எவ்வித முன்னெச்சரிக்கையும் எடுக்கவில்லை என்றவர், ஆட்சியாளர்கள் தற்போது யாகம் நடத்திக் கொண்டிருப்பது ஆட்சியைக் காப்பாற்றவே என்றும் அவர் விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய ஸ்டாலின், சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வர இருப்பதாக வும், தமிழகத்தில் தேர்தல் வராமலே ஆட்சி மாற்றம் வர வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை என உண்மைக்கு மாறான தகவலை கூறும் ஆட்சி யாளர்கள், பள்ளிகளை மூடக் கூடாது, ஹோட்டல்களை மூடக்கூடாது எனக் கூறுவது ஏன் கேள்வி எழுப்பியவர், அதிமுக ஆட்சியாளர்கள் கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்களை முறையாக செயல்படுத்தவில்லை என்பதோடு, முறைகேடுகளும் நடைபெற்றிருப்பதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டுவரும் திட்டம் பற்றிக் குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இருந்துதான் தண்ணீர் கொண்டுவரப் போகிறார்கள் என தெரிவித்தார்.
தவித்த வாய்க்கு தண்ணீர் தரவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை என்றும் அவர் கூறினார்.