சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி கேள்வி- பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
Kalaignar writing
📌 மாணவர்களின் படிப்புக்காக கல்விக் கடன் கொடுத்த வங்கிகள், தற்போது அதை வசூலிப்பதில் கடுமை காட்டுவதின் காரணமாக சில மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்களே?
மிகப் பெரிய கொடுமைதான்!   மாணவர்கள் படிப்புக்காக வங்கிகளில் கடன் பெற்றது உண்மைதான். மொத்த தொகையில் 40 சதவிகிதம் செலுத்திய அம்பானி கம்பெனி தற்போது கந்து வட்டிக்காரனைப் போல மாணவர்களை நெருக்குகிறார்கள்.
மிகப் பெரிய கொடுமைதான்!   மாணவர்கள் படிப்புக்காக வங்கிகளில் கடன் பெற்றது உண்மைதான்.  வேலைக்குச் சென்றால் தான் அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியும். வேலையும் கிடைக்கவில்லை. தமிழகத்தில் மட்டும் சுமார் 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது. பட்டம் பெற்ற மாணவர்களால் வங்கிக் கடனை கட்ட இயலவில்லை.  இந்த நிலையில்தான் இந்திய ஸ்டேட் வங்கி, தனது பங்கான 847 கோடி ரூபாய் கடனை வசூலிக்கும் உரிமையை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு விற்று விட்டது. அதாவது மொத்த தொகையில் 40 சதவிகிதம் செலுத்திய அம்பானி கம்பெனி தற்போது கந்து வட்டிக்காரனைப் போல மாணவர்களை நெருக்குகிறார்கள்.  மாணவர்களில் சிலர் வேறு வழியின்றி தற்கொலையை நாடுகிறார்கள்.  கல்விக் கடனை அடைப்பதாக தேர்தல் நேரத்தில் உறுதிமொழி அளித்த அ.தி.மு.க. அரசு உடனடியாக இந்த மாணவர் களின் கல்விக் கடன்களுக்கு தாங்களே பொறுப் பேற்றுக் கொண்டு, வங்கிகளில் மாணவர்கள் வாங்கியுள்ள கடன்களை அடைக்க முன் வரவேண்டும்.
📌  வழக்கறிஞர் பிரச்சினை மோசமாகிக் கொண்டே போகிறதே?
இரு தரப்பினரும் ஒரே துறையில் உள்ளவர்கள்.  நல்ல கற்றறிவாளர்கள்.  இரண்டு தரப்பிலும் உள்ள பிரதிநிதிகள் ஒற்றுமையாக அமர்ந்து பேசி ஒரு நல்ல முடிவு காண்பதுதான் நல்லது. ஆனால் இந்தப் பிரச்சினை முடியக் கூடாது என்று அரசுத் தரப்பிலே இருப்பவர்கள் நினைப்பதைப் போலத் தோன்றுகிறது!
📌 தேர்தலுக்கு முன்பு கரூருக்கு அருகில் அமைச்சருக்கு மிகவும் நெருங்கிய அன்புநாதன் என்பவர் வீட்டைச் சோதனை செய்து பணம், கேமரா, பணம் எண்ணும் இயந்திரங்கள் ஆகியவற்றைக் கைப்பற்றிய தாக பெரிய அளவில் செய்தி வந்ததே என்ன வாயிற்று?
உங்கள் கேள்வியிலேயே  அன்புநாதன் அமைச்சருக்கு வேண்டியவர் என்று  குறிப்பிட்டிருக்கிறீர்களே; பிறகு என்ன? வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கும்!
📌அரசு ஊழியர்களுக்காக கட்டப்பட்ட 700 வீடுகளை ஐந்து மாதங்களுக்கு முன்பே முதலமைச்சர் திறந்து வைத்தும், யாருக்கும் ஒதுக்கீடு செய்யாமல் தாமதம் செய்கிறார்களாமே?
முக்கியப் பிரமுகரின் உதவியாளரிடம் வீடு ஒன்றுக்கு 5000 ரூபாய் கொடுத்தால் உடனடியாக வீடு ஒதுக்கீடு தரப்படும் என்றும் அதே செய்தியில் பின்குறிப்பு தந்திருக்கிறார்களே!
📌 விவசாயிகள் மகிழ்ச்சியோடு ஆடிப் பெருக்கினைக் கொண்டாட, மேட்டூர் அணையை முதலமைச்சர் ஜெயலலிதா  திறந்து விட்டதாக நாளேடுகள் செய்தி வெளியிட்டிருக்கிறதே?
மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீர் செல்லும் வழித் தடங்களில் புதர்கள், செடிகள், கொடிகள் மண்டிக் கிடப்பதாகவும், அதனால் தண்ணீர் ஆடிப் பெருக்கு விழாவிற்குள் கடைமடைப் பகுதிகளுக்குப் போய்ச் சேருமா என்பதில் சந்தேகம் இருப்பதாகவும், எனவே காவிரி நீர் வழித் தடங்களில் உள்ள அடைப்புகளை நீக்க அரசு உதவிட வேண்டு மென்றும் விவசாயிகள் கோரியிருக்கிறார்கள்.
📌 பொதுவுடைமைவாதிகள் ஒரு சிலரின் சுயநலம் காரணமாக, தமிழகச் சட்டமன்றத்தில் எத்தனையோ ஆண்டுக் காலமாக ஒலித்து வந்த கம்யூனிசக் கொள்கைகளின் வாய் மூடப்பட்டு விட்டதே?
உண்மைதான்!  அதைப்பற்றி நாம் கூறினால்,  நம்மைக் கடுமையான வார்த்தைகளால் தாக்குவதில்தான் அந்த ஒரு சிலர் கவனம் செலுத்துகிறார்கள்.  கம்யூனிசக் கொள்கைகள் சட்டமன்றத்தில் எதிரொலிக்கப்படாமல் இருக்கிறதே என்று நாம்தான் வருத்தப்படுகிறோமே தவிர, அந்தக் கட்சியின் தலைவர்கள் வருத்தப்படுவதாகத் தெரியவில்லை.
📌 “சென்னையில் தொடர்கிறது வழிப்பறி, திருட்டு, வீடு உடைப்பு” என்ற தலைப்பில் “தினமலர்” நாளேடு நேற்று “கொட்டை எழுத்துக்களில்” செய்தி வெளியிட்டுள்ளது எதைக் காட்டுகிறது?
அ.தி.மு.க. அரசு  சட்டம் ஒழுங்கு அமைதியைப் பாதுகாப்பதில் காட்டுகின்ற இலட்ச ணத்தைப் படம் பிடித்துக் காட்டுகின்றது.  “தினமலர்” நாளேடு மட்டுமா இப்படிப்பட்ட செய்திகளை வெளியிட்டுள்ளது? அநேகமாக ஆங்கில நாளேடுகள், வார இதழ்கள் அனைத்திலும் இப்படிப்பட்ட செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.   சட்டம்,  ஒழுங்கைப்  பாதுகாக்கும்  துறை    வேறு அமைச்சரின் பொறுப்பிலே இருந்திருந்தால் இந்நேரம் அவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருப்பார்.  ஆனால் முதலமைச்சரின் பொறுப்பிலே உள்ள துறை அல்லவா அது;  யாரைப் பழி வாங்க முடியும்
📌காவிரி நீர்ப் பிரச்சினை வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு வழக்கறிஞர் ஆஜராகவில்லை என்ற செய்தி வருத்தத்தைத் தருகிறதே?
என்ன செய்வது? காவிரிப் பிரச்சினை தொடர்பான வழக்கு அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, கர்நாடக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறி ஞரின் வாதத்தை ஏற்று காவிரி வழக்குகளை அக்டோபர் மாதம் 18ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது.  இந்த விசாரணையின் போது,  தமிழக அரசின் சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராக வில்லை என்ற செய்தி ஏடுகளில் எல்லாம் வெளி வந்துள்ளது.  தமிழக அரசின் வழக்கறிஞர் வழக்கு நடைபெற்ற போது ஆஜராகாதது பற்றி, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங் கிணைப்புக் குழுத் தலைவர் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.   காவிரி வழக்கு தொடர்ந்து காலம் கடத்தப்பட்டு வரும் நிலையில் தமிழக அரசின் வழக்கறிஞர்கள் ஆஜராகாதது ஏன் என்ற கேள்வி பெரிதாக எழுந்துள்ளது.  தமிழக அரசு இதற்கு உரிய விளக்கம் தருமா?
📌 “கபாலி” திரைப்படத்திற்கு பத்து டிக்கெட்டுகள் அனுப்ப வேண்டுமென்று கடிதம் அனுப்பிய அமைச்சரின் உதவியாளர் பணியிலிருந்து நீக்கப்பட்டு விட்டாராமே?
படத்திற்கு டிக்கெட் கேட்டு கடிதம் அனுப்பியதற்காக என்னை பணியிலிருந்து நீக்கி விட்டார்களே, அந்தப் படத்தைத் திரையிடும் உரிமையை முதல் அமைச்சரின் வீட்டிலேயே தங்கியிருக்கும் ஒருவர் (ஜாஸ் நிறுவனத்தின் உரிமையாளர்) பெற்று, கோடிக்கணக்கிலே  இலாபம் அடைகிறாரே, அவருக்கு எந்தத் தண்டனையும் கிடையாதா என்று அந்த உதவியாளர் கேட்காமல், கேட்கிறாராம்!
📌 சென்னை உயர் நீதிமன்றம், அ.தி.மு.க. அரசுக்கு மீண்டும் ஒரு கண்டனம் தெரிவித்திருக்கிறது?
எத்தனை கண்டனங்கள் வந்தால்தான் என்ன? அதைப் பற்றி யார் கவலைப்படுகிறார்கள்? அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் – அதனை தி.மு. கழக ஆட்சிக் காலத்தில் நான் உருவாக்கினேன் என்ற ஒரே காரணத்திற்காக  –  அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்காமல் இருந்தது பற்றி வேதனையடைந்த ஓய்வு பெற்ற பேராசிரியை மனோன்மணி, அது பற்றி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்தார்.  சென்னை உயர் நீதிமன்றம் அதனை விசாரித்து, நூலகத்தை ஆய்வு செய்வதற்காக இரண்டு வழக்கறிஞர்கள் பி.டி. ஆஷா,  எம். சுந்தர் ஆகியோரை நியமித்தது.  அவர்கள் அவ்வாறே ஆய்வு செய்து, நூலகத்தின் அடிப்படை வசதிகள், தொழில் நுட்ப வசதிகள், அரங்குகள் ஆகியவை மோசமாக இருப்பதாகத் தெரிவித்தனர்.  மூத்த வழக்கறிஞர் பி. வில்சனும்  நீதிமன்றம் பல முறை உத்தரவிட்டும் அண்ணா நூலகத்திலே அடிப்படை வசதிகள் எதுவும் செய்ய வில்லை என்று வழக்கு விசாரணையின் போது எடுத்துக் கூறினார்.  அப்போது உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் அவர்களும்,  நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் அவர்களும் “நீதிமன்ற உத்தரவை அரசு அமல்படுத்தாதது ஏன்?  உங்களுக்கு இஷ்டம் இருந்தால் 48 மணி நேரத்தில் எது வேண்டுமானாலும் செய்வீர்கள்.  ஜூன் 30ஆம் தேதி இறுதிக் கெடு விதிக்கிறோம்.  அதற்குள் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும். அதற்கான புகைப்பட ஆதாரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இறுதி கெடுவுக்குள் வசதிகளைச் செய்து கொடுக்காவிட்டால், நீதிமன்றமே அண்ணா நூலகத்தை தனது கட்டுப்பாட்டில் எடுத்து அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்து, பராமரிக்கத் தொடங்கும்.  இதைக் கண்டனமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறினார்கள்.  ஜூலை 22ஆம் தேதியன்று மீண்டும் இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.  அப்போது மூத்த வழக்கறிஞர் வில்சன், “நூலகத்தைப் பராமரிக்க உத்தரவிட்ட போதிலும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.கடந்த தி.மு. கழக ஆட்சிக் காலத்தில் அந்த நூலகத்திற்கு புத்தகங்கள் வாங்குவதற்காக 32 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, ஆறு இலட்சம் புத்தகங்கள் வாங்கப்பட்டன. ஆனால் கடந்த ஆறு ஆண்டுகளில் வெறும் 1234 புத்தகங்கள் மட்டுமே வாங்கப்பட்டுள்ளன.  அதிலும் ஒன்று கூட தமிழ்ப் புத்தகம் இல்லை. அந்த நூலகம் தொடங்கப்பட்டு ஐந்தாண்டுகள் ஆகியும், அந்த நூலகத்தில் ஒரே ஒருவர்தான் உறுப்பினராக பதிவு செய்யப்பட்டுள்ளார். அந்த ஒரு உறுப்பினர் முன்னாள் முதல்வர் எம். கருணாநிதி அவர்கள்தான்.  அவரைத் தொடர்ந்து வந்த அரசாங்கம் உறுப்பினர்கள் பதிவு செய்வதையே நிறுத்தி விட்டதுதான் அதற்குக் காரணம்” என்றெல்லாம் வாதாடியிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு நூலகத்தை முறையாகப் பராமரித்து அக்டோபர் 31ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்றும், தவறினால் நீதிமன்றமே குழு அமைத்து அந்தப் பணியை மேற்கொள்ளும் என்றும் வாய் வழியாக எச்சரித்திருக்கிறார்கள்.
📌 சேலத்தைச் சேர்ந்த சமூக சேவகர், பியூஷ் மனுஷ் சிறையில் கடுமையாகத்  தாக்கப்பட்டுள்ளாரே?
வன்மையான கண்டனத்திற்கு உரிய செய்தி அது.  பியூஷ் மனுஷ் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர். தான் செய்துவந்த கொசு வலை உற்பத்தித் தொழிற்சாலையை மூடி விட்டு,  தன்னை ஒரு முழு நேரச் சூழலியல் செயற்பாட்டாளராக மாற்றிக் கொண்டார்.  பியூஷ் சேத்தியாவாக இருந்தவர், தன் பெயரில் இருந்த “சேத்தியா” என்ற சாதிப் பெயரை நீக்கிவிட்டு, ‘பியூஷ் மனுஷ்” என்று தன் பெயரை வைத்துக் கொண்டார்.  சேலம் மாநகரில் மக்களைத் திரட்டி, அவ்வப்போது மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து வருகிறார். “சேலம் மக்கள் குழு” என்ற அமைப்பையும் தொடங்கி நடத்தி வருகிறார்.  சேலத்தில் முன்ளுவாடி கேட் பகுதியில் மேம்பாலம் கட்டும் வேலைகள் அண்மையில் தொடங்கப்பட்ட போது, அந்தப் பகுதி மக்களுக்கு முன்கூட்டியே நோட்டீஸ் கொடுக்கப்படவில்லை. மக்களிடம் உரிய முறையில் முன்பாகவே தகவல் தெரிவித்த பிறகே பணிகள் தொடங்கப்பட வேண்டுமென்று சேலம் மக்கள் குழு ஜூலை 8ஆம் தேதி ஜனநாயக முறையில் எதிர்ப்புத் தெரிவித்து, அமைதியான முறையில் போராட்டம் நடத்தியிருக்கிறது.  போராட்டத்தில் ஈடுபட்டு பியூஷ், கார்த்திக், முத்து ஆகியோரைக் காவல் துறை கைது செய்து நான்கு பிரிவுகளில் வழக்கு தொடுத்திருக்கிறது.  சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த பியூஷ் சிறையில் தன்னை சிறை அதிகாரிகள் கடுமையாகத் தாக்கியது குறித்து உறவினர்களுடன் கதறி இருக்கிறார்.  பியூஷின் வழக்கறிஞர் மாயன், “பியூஷ் கரங்களைக் கட்டி, இருட்டு அறையில் வைத்து ஏறத்தாழ முப்பது பேர் அவரைத் தாக்கியிருக்கிறார்கள்.   சாதாரண ஒரு வழக்கில் கைது செய்யப்பட்ட சமூகச் செயற்பாட்டாளர் மீது ஏன் இவ்வளவு வன்மம்? வினுப்பிரியா தற்கொலையைத் தொடர்ந்து நடந்த ஆர்ப்பாட்டங்களை பியூஷ்தான் நடத்தினார்.  அதை மனதில் வைத்துக் கொண்டு தாக்கியிருக்கிறார்கள் என்று சந்தேகமாக இருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.  பியூஸ் இதுகுறித்து வழக்கு தொடுக்கப் போவதாகவும் கூறியிருக்கிறார்.  மனித உரிமைகள் ஆணையமும் இது குறித்து விளக்கம் கேட்டுள்ளது. அரசு தரப்பில் சிறைத் துறையினரிடம் விளக்கம் கேட்டு மேல் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் செய்தி வந்துள்ளது.  இதில் உண்மை என்ன என்பது விசாரணைக்குப் பிறகுதான் தெரியும்!