சென்னை: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதையொட்டி, கடந்த 2 நாட்களாக ஆய்வு செய்த, தேர்தல் ஆணைய உயர்மட்டக் குழுவினர், 80 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தபால் வாக்களிக்கலாம் என்ற புதிய முறை தமிழகத்திலும் அமல்படுத்தப்படும் என தெரிவித்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
இதுகுறித்து திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தப்படும் இந்த புதிய முறையால் தேர்தலில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது. வேண்டுமானால், முதியவர்களுக்கு தனி வாக்குச்சாவடிகளை அமைக்கலாம் என்றும், தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
இந்த வழக்கு வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் மற்றும் ஆர்.ஹேமலதா அமர்வில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்த புதிய நடைமுறையை எதிர்த்து ஊனமுற்றோர் உரிமைகளுக்காக போராடும் ‘டிசம்பர் 3’ இயக்கத்தின் தலைவரான காஞ்சிபுரத்தைச் சேர்ந்த டி.எம்.என் தீபக் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.