சேலம்: நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து என்பது மக்களை ஏமாற்ற திமுக நடத்தும் புதிய நாடகம் என எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக சாடியுள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட் என்று கூறி வெற்றி பெற்ற நிலையில், தற்போது நீட்டை ரத்து செய்ய முடியாமல் திண்டாடி வருகிறது. தற்போது நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் தொடங்கி உள்ளது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து என்பத திமுகவின் புதிய நாடகம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். சேலத்தில் இஸ்லாமியர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் இணைந்தவர்களை வரவேற்பாக கூறியவர், அதிமுக எப்போதும் சிறுபாண்மையின மக்களுக்கு ஆதரவாகவே செயல்படும் என்றார்.
தொடர்ந்து பேசியவர், ” நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம், திமுகவின் புதிய நாடகம். கையெழுத்து வாங்கி என்ன செய்யப் போகிறீர்கள்?. திமுகவின் போலி நாடகத்தை பார்த்து மக்கள் ஏமாற மாட்டார்கள். மத்திய அரசை எதிர்க்க முடியாத அரசாக திமுக உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வந்துவிட்டதால் நீட்டை ஒழிக்க முயற்சிப்பது போல் பாசாங்கு செய்து மக்களை ஏமாற்றுவதற்கு நீட் விலக்கு இயக்கத்தை தொடங்கியுள்ளனர்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றும் நீட்டை ஒழிக்கும் ரகசியம் எங்களுக்கு தெரியும் என்றெல்லாம் பொய்யான வாக்குறுதிகளை கூறி திமுக ஆட்சிக்கு வந்தது. ஆனால் இன்று கையெழுத்து இயக்கம் நடத்துகிறோம் என மக்களை திசைதிருப்பி வருகின்றனர்.
இவர்கள் நடத்தும் கையெழுத்து இயக்கத்தால் ஒரு பிரயோஜனமும் இல்லை இது ஒரு நாடகம் என்று கடுமையாக சாடினார்.
மேலும், பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியே வந்ததும், திமுகவுக்கு பயம் வந்துவிட்டது. தற்போதுதான் திமுகவுக்கு இஸ்லாமியர்களின் பிரச்னைகள் ஞாபகத்திற்கு வந்துள்ளது. இஸ்லாமியர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்தது முந்தைய அதிமுக அரசுதான்.
கூட்டணி என்பது தேர்தலின்போது வைப்பது, ஆனால் கட்சியின் கொள்கை நிலையானது. அதிமுக ஒன்றும் பாஜகவின் பி டீம் கிடையாது, நாங்கள்தான் உண்மையான ஏ டீம். கூட்டணியில் இருந்தபோதே, கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பாஜகவை தூக்கியெறிந்த கட்சி அதிமுக. அதிமுகவை பொருத்த வரையில் பாஜக ஒரு பொருட்டே அல்ல.
இவ்வாறு கூறினார்.