சென்னை: நாளை (நவ. 29ந்தேதி)  திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்  டிசம்பர் 1 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். குளிர்கால கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்களை  நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதேவேளையில், தற்போது தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் நடைபெற்று  எஸ்.ஐ.ஆர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், நாளை ( நவம்பர் 29 ஆம் தேதி) திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என்று கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில்,  திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில், திமுக மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நவ. 29 ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நடைபெறும். திமுக மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.